இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையாக இருக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து கொஞ்ச காலம் விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வந்துக்கொண்டு இருந்தது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர். இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்பனட்டன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி விமானம் பள்ளிகள் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது கோவில்களுக்கும் வரத் தொடங்கிவிட்டன.
ஆம்! அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஏற்கனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதால், இந்த மிரட்டலை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 13.5 கோடி சுற்றுலாப் பயணிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.