
பள்ளிகள், விமானங்களை அடுத்து தற்போது உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து சமீபக்காலமாக விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வருகிறது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள், விமானம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறைக்கு இன்று வந்த இமெயில் ஒன்றில் தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய்கள் ஆகியோர் தாஜ்மஹால் விரைந்ததாகவும், தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸார் விளக்கமளித்துள்ளனர். அதாவது, சுற்றுலாத் துறைக்கு வந்த ஈமெயிலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த சோதனையை செய்ததாகவும், சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது ஒரு போலியான மிரட்டல் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது போலீஸார் சைபர் கிரைம் உதவியுடன் மிரட்டல் விட்ட நபரைத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.