

உலகில் ஆங்காங்கே அவ்வப்போது மருத்துவ அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.அவற்றில் ஒன்று இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு அதிசயம்.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் நகரைச் சேர்ந்தவர் குல்தீப் சுக்லா. இவரது மனைவி 50 வயதுடைய வினீதா சுக்லா. கடந்த 2026 பிப்ரவரி 22-ஆம் தேதி, உயர் இரத்த அழுத்தத்திற்காக (High BP) வினீதா மாத்திரை சாப்பிட்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட 15 நிமிடங்களில் அவர் திடீரென மயக்கமடைந்தார்.
உடனடியாக அவர் பிலிபித் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடல்நிலை சீராகாததால், பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது என டாக்டர்கள் கூறியுள்ளனர். பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தினர். இதனால் சோகமடைந்த உறவினர்கள், வினீதாவின் உடலைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.
இதனால், கணவர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் ஆம்புலன்ஸ் காரில் புறப்பட்டு உள்ளனர். அப்போது, பிப்ரவரி 24 ஆம் தேதி அவளை வீட்டிற்கு அழைத்து வரும்போது, தேசிய நெடுஞ்சாலையில் ஹபீஸ்கஞ்ச் அருகே ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறியது. அந்த பலமான அதிர்வில், வினீதா திடீரென மூச்சு விட ஆரம்பித்தார்; அவரது உடலில் அசைவு ஏற்பட்டது.அவர் அசைந்து மூச்சு விட ஆரம்பித்தாள்.இதைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வினீதாவை பரிசோதித்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராகேஷ் சிங் (Dr.Rakesh Singh)இது பாம்பு கடியின் நச்சுத்தன்மையாக (Snake Bite) இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டார். உடனடியாக அவருக்கு விஷ முறிவு மருந்துகளை (Anti-venom) வழங்கினார்.
இதுபற்றி டாக்டர் ராகேஷ் சிங் கூறும்போது,"நாங்கள் ஐ.சி.யு. குழுவை தயாராக இருக்க கூறி சிகிச்சை அளித்தோம். சில சமயங்களில் பாம்பு கடியின்போது, நியூரோடாக்சின்கள் வெளிப்படும். அந்த சூழலில், சிலர் உடனே சுயநினைவற்று போய் விடுவார்கள். கை, கால்களில் இயக்கம் இருக்காது .இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கண்ணின் கண்மணிகள் கூட விரிவடைந்து, நிலைமை மிகவும் மோசமாகத் தோன்றும்."என கூறினார்.
நாங்கள் பாம்பு கடிக்கான முறிவு மருந்து கொடுத்து சிகிச்சையை தொடங்கினோம். 24 மணிநேரத்திற்கு பின்னர் அவரிடம் அசைவு காணப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்னர் அந்த பெண் மெல்ல சுயநினைவுக்கு வந்துள்ளார். இதன்பின்பு செயற்கை சுவாச குழாய் அகற்றப்பட்டது. அவர் தற்போது நடந்து செல்ல கூடிய அளவில் உள்ளார் என கூறினார்.
தற்போது வினீதா முழுமையாகக் குணமடைந்து நடக்கத் தொடங்கியுள்ளார். உயர் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டது மட்டுமே தனக்கு நினைவிருப்பதாகவும், அதன் பின் நடந்த எதையும் தான் உணரவில்லை என்றும் வினீதா கூறினார். மயானம் வரை சென்றவர் மீண்டும் உயிர் பெற்று வந்தது அந்தப் பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.