இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதில் பிரேசில் ஆர்வம் காட்டி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஒரு முக்கிய உந்துதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் அரசு, குறிப்பாக அதன் விமானப்படை, தங்கள் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் ஆகாஷ் அமைப்பை ஒரு சாத்தியமான தேர்வாகக் கருதுகிறது.
ஆகாஷ் என்பது ஒரு நடுத்தர தூர, மேற்பரப்பிலிருந்து வான் தாக்குதல் நடத்தும் ஏவுகணை அமைப்பு ஆகும். இது DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) ஆல் வடிவமைக்கப்பட்டு, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அமைப்பு ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டது மற்றும் நவீன மின்னணுப் போர் திறன்களையும் கொண்டுள்ளது. இதன் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள், பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், பிரேசிலில் நடக்கும் BRICS பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளில்,ஒரு இந்தியப் பிரதமரின் மிக நீண்ட இராஜதந்திர பயணம் இதுவாகும்.
இந்தோ-பிரேசில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பிரேசில், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஆகாஷ் ஏவுகணைக்கான பிரேசிலின் ஆர்வம், இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறினால், இந்தியாவின் "மேக் இன் இந்தியா" மற்றும் "ஆத்மநிர்பர் பாரத்" திட்டங்களுக்கு இது ஒரு பெரிய வெற்றியாக அமையும்.
தற்போது, பிரேசிலிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் தொழில்நுட்ப பரிமாற்றம், விலை நிர்ணயம் மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், சர்வதேச ஆயுத சந்தையில் இந்தியாவின் நிலையை கணிசமாக உயர்த்தும், மேலும் பல நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளைத் திறக்கும்.