

டிட்வா புயலால் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு எண்ணூர் கடற்பகுதிக்கு அருகே டிட்வா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபிழ்நாட்டில் டிட்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது வரை தமிழ்நாட்டில் டிட்வா புயலால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு தமிழ்நாட்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 582 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது தவிர 1,601 வீடுகள் மற்றும் குடிசைகள் டிட்வா புயலால் சேதம் அடைந்துள்ளன.
கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ள நிலையில், இதுவரை 85,526.76 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையில், சென்னையில் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை தொடர்ந்து நீடித்து வந்தாலும், ஆவின் பால் விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் இதுவரை 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை விடியும் வரையும் மழை இருக்கும் என்பதால், அவசியமின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.