
இமாச்சலப் பிரதேசத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தனது தந்தையை இழந்த 10 மாதக் குழந்தையான நீதிகாவை மீட்புக்குழு பத்திரமாக காப்பாற்றியது. இந்நிலையில் கைக்குழந்தையான நீதிகாவை மாநிலத்தின் குழந்தையாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தல்வாரா கிராமத்தில் கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 01 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. இதனால் இம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளப்பெருக்கில் உறவினர்களைத் தொலைத்து விட்டு பலபேர் கதறினர். இதில் 10 மாதக் குழந்தையான நீதிகாவின் தந்தை ரமேஷ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தார். குழந்தையை மட்டும் மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.
நீதிகாவின் தாய் ராதா மற்றும் பாட்டியின் நிலைமை என்னவானது என்று இன்றுவரை தெரியவில்லை. தொடர்ந்து மீட்புக்குழுவினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லாமல் போனது. இந்நிலையில் இத்தனை நாட்கள் மாநில அரசின் பாதுகாப்பில் இருந்த குழந்தை நீதிகா மாநிலத்தின் குழந்தையாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இமாச்சலப் பிரதேசம் மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், “வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட குழந்தை நீதிகாவின் உறவினர்கள் வெள்ளப்பெருக்கில் காணாமல் போனதால், குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. இதன்படி சுக்-ஆஷ்ரய் யோஜானா திட்டத்தின் படி, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் குழந்தையாக நீதிகா அறிவிக்கப்பட்டுள்ளார். குழந்தை நீதிகாவை வளர்ப்பது முதல் கல்வி பயிற்றுவித்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவது வரை முழு பொறுப்பையும் மாநில அரசே ஏற்கும். இது எங்களின் கடமையாகும்” என முதல்வர் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜானா திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தின் படி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும். இதற்காக ரூ.101 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் பல பெண்களின் கல்விக் கனவு நனவாகி வரும் நிலையில், தற்போது குழந்தை நீதிகாவிற்கும் ஆதரவாக நிற்கிறது இந்தத் திட்டம்.