

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக, பாஜக மற்றும் தவெக இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. என்டிஏ கூட்டணியில் தவெக-வை இணைக்க, பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி அளித்து, 50 முதல் 80 இடங்கள் தருவதாக பாஜக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்பத்தில் 40 இடங்களில் தொடங்கிய இந்த பேரம் தற்போது 80 தொகுதிகள் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணி தயாராக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் தவெக-வை இணைக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக-வின் வருகையை காரணம் காட்டி, தற்போது வரை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் எண்ணம் இருந்தால் எங்களுடன் கூட்டணி சேருங்கள் என பாஜக தரப்பில் இருந்து தவெக-விற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை தவெக கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையவில்லை என்பதால், என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்த அவசர ஆலோசனையில் தவெக இறங்கியுள்ளது.
இதன்படி விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி வருகிறார். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் செங்கோட்டையன் சந்திக்க உள்ளார்.
ராமதாஸை கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வரும் அதே வேளையில், தவெக-வை என்டிஏ கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
தவெக-வை கூட்டணியில் இணைக்க அதிமுக சார்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் பாஜக டெல்லி மேலிடம், நேரடியாக தவெக-வை தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தவெக, என்டிஏ கூட்டணியில் இணையுமா அல்லது இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தவெக என்டிஏ கூட்டணியில் இணைந்தால், தமிழகத்தில் பலமான கூட்டணியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய், துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற ஆஃபரை ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தவெக கூட்டணியில் இணைந்தால், அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.