

தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது தேர்தல் ஆணையம். இதன்படி வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதேபோல் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
எப்போதுமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நாளில் தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இரு வேறு தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 5 மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5.67 கோடி வாக்காளர்களில் 2.89 கோடி பேர் பெண்கள் மற்றும் 2.78 கோடி பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 மாநிலங்களின் தேர்தல் தேதி:
1. தமிழ்நாடு: ஏப்ரல் 23
2. புதுச்சேரி: ஏப்ரல் 09
3. கேரளம்: ஏப்ரல் 09
4. அசாம்: ஏப்ரல் 09
5. மேற்கு வங்கம்: முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29.
5 மாநில தேர்தல் முடிவுகளும் மே 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு:
* வேட்புமனுத் தாக்கல்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை.
* வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 7.
* வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9.
* வாக்குப்பதிவு: ஏப்ரல் 23.
புதுச்சேரி:
* வேட்புமனுத் தாக்கல்: மார்ச் 16 முதல் மார்ச் 23 வரை.
* வேட்புமனு பரிசீலனை: மார்ச் 24.
* வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 26.
* வாக்குப்பதிவு: ஏப்ரல் 9.
கடந்த 2001-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் கடைசியாக நடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே தேதியில் தான் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் இம்முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு வெவ்வேறு தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்முறை பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றதன் காரணமாக, தேர்தல் தேதிகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.