

கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஒரு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.9,520 உயர்ந்துள்ளது. இது தவிர வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தொடர் விலையேற்றம் காரணமாக நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.9,520 உயர்ந்து, ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு உயர்ந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் தற்போது கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூ.425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என இரண்டு முறை ரூ.5,000-க்கும் மேல் உயர்ந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.9,520 வரை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகப் பொருளாதாரச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் அமெரிக்க டாலரின் நிச்சயமற்றத் தன்மையும், உலக நாடுகளுக்கு இடையிலான போரும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.