

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் சூழலின், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இருப்பது நல்லதல்ல எனக்கூறி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணி திரண்டது. மேலும் எஸ்பி.வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் ஆகியோரின் தலைமையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர்.
இது அதிமுகவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெக-வுக்கு ஆதரவாளித்த அனைத்து எம்எல்ஏக்களின் பதவியையும் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த செம்மலை தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அக்காட்சியில் பயணிக்க எனது மனம் இடம் தரவில்லை. ஆகையால் தான் தற்போது அதிமுக கட்சியில் இருந்து விலகும் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் தற்காலிக சபாநாயகர் ஆகும் இவர் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
அதிமுகவின் முன்னணி நிர்வாகியான செம்மலை, தற்போது கட்சியில் இருந்து விலகி இருப்பது, இபிஎஸ்க்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சிவி.சண்முகம் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணியாக பிரிந்துள்ள அதிமுகவில், முன்னணி நிர்வாகிகளின் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது