

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சென்ற நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையின் இரண்டாவது நாள் முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை கூடிய சட்ட சபையின் ஐந்தாவது நாளில், தமிழக மக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வெளியிடுட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது தமிழக முதல்வர் இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார
புதிய அறிவிப்புகள்:
1. கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடி செலவில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.
2. அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2,000 இலிருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3. ரூ.1,088 கோடி செலவில் கிராமப்புறங்களில் 2,800 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.
4. பணி ஓய்வின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி காலத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
6. முதியவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
7. சிறப்பு ஓய்வூதியம் வாங்கி வரும் பணியாளர்கள் உயிரிழந்தால், இறுதிச் சடங்குக்கு ரூ.20,000 வழங்கப்படும்.
தமிழக மக்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், “நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஏனெனில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது மக்கள் மனநிறைவு அடைந்த வகையில் ஆட்சியில் நடத்தி வருகிறோம்.
திராவிட மாடலின் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவிற்கு இருக்கும். கட்டணமில்லா மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிலும் ரூ.800 முதல் ரூ.1,600 வரை சேமிக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.