தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை, ஜூலை 21, 2025) காலை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, முதல்வருக்கு கடந்த சில நாட்களாக சிறிய உடல்நலக் குறைபாடு காணப்பட்டதால், மருத்துவ ஆலோசனையின் பேரில் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது முதல்வர் ஸ்டாலின் சோர்வு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இது ஒரு வழக்கமான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் முக ஸ்டாலினுக்கு காலை நடைபயிற்சி செய்கையில் லேசான மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்தன.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து பொதுமக்கள் மத்தியில் ஒருவித கவலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் முதல்வர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலினை இரண்டு நாட்கள் முழுமையான ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போதுதான் முழுமையான சோர்வு நீங்கும் என்று கூறியிருப்பதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இன்று கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கோவை, திருப்பூருக்கு நாளை செல்லவிருந்தார். மருத்தவர்களின் இந்த ஆலோசனையால், இரண்டு நாட்கள் பயணம் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.