Breast milk donation!
Breast milk donation!

தாய்ப்பால் தானம் - இப்படியும் ஒரு தாய்!

Published on

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு அமிர்தம் போன்றது. ஆனால் பல அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய தாய்ப்பால் கிட்டுவதில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கிகள் இயங்கி வருகிறன்றன. இங்கே தானமாக பெறப்படும் தாய்ப்பால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாப்பான நிலையில் வைக்கப்படுகின்றது. பின்னர் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு அந்த பால் வழங்கப்படுகிறது.

இதில் உள்ள பெரிய சிக்கல் இன்னும் நம் தாய்மார்கள் மத்தியில் தாய்ப்பால் தானம் பிரபலமாகவில்லை என்பதுதான். குழந்தையை பெற்ற தாய் தன் குழந்தைக்கு கொடுத்தது போக மீதமுள்ளவற்றை தானமாக வழங்கலாம். இதனால் மார்பில் பால் கட்டுதல் போன்ற உடல் உபாதைகளை பெரும்பாலும் தவிர்க்க முடியும். ஆனாலும் தாய்ப்பால் தானம் குறித்த சரியான புரிந்துணர்வு நம்மிடையே இல்லை என்று தான் கூற வேண்டும்.

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக இயங்கி வரும் நிலையில், திருமணமான பட்டதாரி பெண் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தைகளுக்கு பால் கிடைக்காத அவலத்தை கண்டுள்ளார். அதன் பின்னர் இது போன்ற குழந்தைகளுக்கு என்ன தீர்வு? என பல்வேறு இடங்களில் விசாரித்த போது தாய்ப்பால் தானம் குறித்து அவருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அவர் தாய்ப்பால் தானம் செய்யத் தொடங்கினார்.

வாரத்துக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தாய்ப்பால் வரை அவர் தானமாக வழங்கி வருகிறார். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இவருக்கு அறிவுரைகள், உபகரணங்கள் வழங்கி பேருதவி செய்து வருகிறது. இதன் மூலமாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா அவசியம்: ஏன் தெரியுமா?
Breast milk donation!
Breast milk Donor - Divya Ashok
Breast Milk Donor - Divya Ashok

இதுகுறித்து தாய்ப்பால் தானம் செய்து வரும் திவ்யா அசோக் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் எனது குழந்தை பிறப்புக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அப்போது நான் பார்த்த பல குழந்தைகளுக்கு அவர்களின் தாயிடம் இருந்து தாய்ப்பால் கிடைக்காமல் அழுது கொண்டிருந்தன. அதை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான் தாய்ப்பால் வங்கியில் இருந்து அந்த குழந்தைகளுக்கு பால் கொடுத்தனர். இதை பார்த்ததும் எனக்கும் ஒரு ஆசை ஏற்பட்டது. நம் குழந்தைக்கு கொடுத்தது போக மீதமான பாலை தானமாக வழங்கலாம் என முடிவு செய்தேன். அதன் பின்னர் பல்வேறு இடங்களில் விசாரித்து கோயம்புத்தூர் அமிர்தா என்ற நிறுவனத்தின் உதவி மற்றும் ஆலோசனையுடன் தாய்ப்பால் தானமாக வழங்கி வருகிறேன். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஐந்து முதல் ஆறு லிட்டர் தாய்ப்பால் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்குகிறேன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இப்படி பாலை தானமாக கொடுத்தால் என்ன கிடைக்கப் போகிறது? அதை பச்சை செடி மீது ஊற்றினால் இன்னும் பால் அதிகமாக சுரக்கும். அதை உன் குழந்தைக்கு கொடுக்கலாமே என்கின்றனர். இப்படியும் தவறான எண்ணங்கள் இன்னமும் நம் மக்கள் மனதில் உள்ளது. தாய்ப்பால் தானம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. என் குழந்தைக்கு பால் கொடுக்கும் வரை நான் தாய்ப்பால் தானம் செய்வேன். மேலும் என்னால் முடிந்த அளவு தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்விலும் ஈடுபட முடிவு செய்துள்ளேன்" என்றார்.

தாய்ப்பால் தானம் வழங்கும் திவ்யாவுக்கு வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டத்தில் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் வைத்து மரியாதை செய்ய மருத்துவத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com