ஐக்கிய இராஜ்யத்தில் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்க பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையால் உலகிலேயே மிகக் குறைந்த வாக்களிப்பு வயதைக் கொண்ட நாடுகளில் பிரிட்டனும் இணைந்திருக்கிறது.
தொழிலாளர் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வாக்களிக்கும் வயதைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தொழிலாளர் அரசு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், 16 மற்றும் 17 வயதுடையவர்கள் வேலைக்குச் சென்று வரி செலுத்தும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவர்கள் என்றும், ராணுவத்தில் கூட பணியாற்றுகிறார்கள் என்றும், எனவே அவர்களுக்குத் தங்கள் பணத்தை அரசாங்கம் எப்படி செலவழிக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் 16 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகளிலும் 16 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை அளித்துள்ளன. இந்த புதிய மாற்றம், ஒட்டுமொத்த பிரிட்டனுக்கும் பொதுத் தேர்தலிலும் அதே உரிமையை வழங்குகிறது. இது சுமார் 1.5 மில்லியன் 16 மற்றும் 17 வயதினரை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர் கூறுகையில், “நமது ஜனநாயகச் செயல்முறையில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.” என்று பேசினார்.
இந்த முடிவுக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் அரசியல் செயல்பாடுகளில் அதிக அளவில் ஈடுபட இது உதவும் என்றும், ஜனநாயகத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வாக்காளர் அடையாள அட்டையாக வங்கிக் கார்டுகளை ஏற்றுக்கொள்வது, தானியங்கி வாக்காளர் பதிவு போன்ற பிற தேர்தல் சீர்திருத்தங்களும் இந்த புதிய திட்டத்தில் அடங்கும். இதன்மூலம் வாக்களிப்பதை எளிதாக்க முடியும்.
1969 ஆம் ஆண்டில் வாக்களிக்கும் வயது 21ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்ட பிறகு, பிரிட்டனின் தேர்தல் அமைப்பில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். இந்த புதிய சட்டம், பிரிட்டன் ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்கை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.