
அகத்திக்கீரை உசிலி
தேவை:
அரிந்த அகத்திக்கீரை - 2 கப், உப்பு - தேவைக்கு, துவரம்பருப்பு - 1/4 கப், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 2.
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்(தூள்), உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, வரமிளகாய் மூன்றையும் கழுவி நீர் விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். அகத்திக்கீரையை உப்பு சேர்த்து அளவான நீர் விட்டு வேகவிட்டுத் தனியே வைக்கவும். ஊறிய பருப்புகளில் உள்ள நீரை வடிகட்டி உப்பு, மிளகாயுடன் கொரகொரப்பாக அரைத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த அகத்திக் கீரை, சுற்றிய பருப்பு சேர்த்து வதக்கவும். கீரையும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும். அகத்திக்கீரை உசிலி தயார்.
*****
வாழைப்பூ உசிலி
தேவை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கொள்ளு - 4 டீஸ்பூன்,
வாழைப்பூ - ஒன்று,
வர மிளகாய் - 1,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொள்ளு நான்கையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை களைந்து, வடிகட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி, ஆறிய உடன் நன்கு பிழிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து உதிரியாக வரும்வரை மிதமான தீயில் கிளறவும். பருப்பு மொறுமொறுப்பாக ஆனவுடன் பிழிந்து வைத்து இருக்கும் வாழைப்பூவை போட்டுக் கிளறி. எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும். சுவையான, சத்தான வாழைப் பூ உசிலி தயார்.
*****
மொச்சை வெஜிடபிள் உசிலி
தேவை:
மொச்சை – 50 கிராம், கத்திரிக்காய், முட்டைகோஸ் – தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல்,
கீறிய பச்சை மிளகாய் – 6, கடலைப்பருப்பு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மொச்சையை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து… பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு வதக்கி, வேகவைத்த மொச்சையைச் சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். வித்தியாசமான சுவையில் மொச்சை வெஜிடபிள் உசிலி தயார்.
*****
வெந்தயக்கீரை - பச்சை பட்டாணி உசிலி
தேவை:
வெந்தயக்கீரை, பச்சை பட்டாணி – தலா ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரை கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
வர மிளகாய் – 7,
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து, மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெந்தயக்கீரை, பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இந்தக் கலவையை ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கீரை – பருப்பு கலவையைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான வெந்தயக்கீரை - பட்டாணி உசிலி தயார்.