.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியாவில் தற்போது 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றிற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாப் லிமிடெட் (BSNL) பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி தற்போது ஒரு மாதம் முழுக்க 1 ரூபாய்க்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது BSNL.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. அப்போது ஒருசில வாடிக்கையாளர்களின் கவனம் BSNL பக்கம் திரும்பியது. இதனால் BSNL நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ‘சுதந்திர தினத் திட்டம்’ என்ற பெயரில் 1 ரூபாய்க்கு 1 மாதம் முழுவதும் வரம்பற்ற சேவையை வழங்க BSNL முடிவு செய்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL நிறுவனம், தனது 4G சேவையை சோதித்துப் பார்க்கும் வகையில் 1 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இணைய சேவையை வழங்குகிறது.
இந்தத் திட்டம் ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்திய சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி தான் BSNL அறிமுகப்படுத்திய 1 ரூபாய் சேவை. மேலும் இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4G சேவையை வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுபவிக்க முடியும். 1 ரூபாய் சுதந்திர தினத் திட்டத்தில் புதிய BSNL சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.
அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். சிம் கார்டு வாங்க ஆதார் அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
1 ரூபாய் சுதந்திர தினத் திட்டத்தில் தினமும் 100 குறுஞ்செய்திகள், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 2GB 4G சேவை கிடைக்கும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதே அளவு சேவையைப் பெற வேண்டுமானால், ரூ.300 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் BSNL நிறுவனம் இந்தச் சேவையை வெறும் 1 ரூபாய்க்கே வழங்குவதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.