

வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
விவசாயிகளுக்கு புதிய திட்டங்களை அறிவிக்கவும், ஏற்கனவே இருக்கும் பழைய திட்டங்களை புதுப்பிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த அறிவிப்புகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக ‘பிரதான் மந்திரி குசும் யோஜனா (Pradhan Mantri Kusum Yojana)’ திட்டத்தின் புதிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.
அடுத்த சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால், கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் கிராமப்புறத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் குசும் யோஜனா திட்டம் வருகின்ற மார்ச் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளது. விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச டீசல் பம்புகளை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கு, சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பம்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி செலவைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்கலாம். பிரதான் மந்திரி குசும் யோஜனா 2.0 திட்டத்தை தொடங்க, மின் அமைச்சகம் நிதி அமைச்சகத்திடம் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு ரூ.50,000 கோடி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:
1. பிரதான் மந்திரி குசும் யோஜனா 2.0 திட்டத்தின் மூலம் மிக குறைந்த செலவில் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் கிடைக்கும்.
2. பேட்டரி சேமிப்பு திறனைப் பயன்படுத்துவதன் மூலம் பகலிலும், இரவிலும் மின்சாரத்தைப் பெற முடியும். இதனால் மின் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
3. நீர்ப்பாசன முறையை மேம்படுத்தி, விவசாய உற்பத்தி திறனை பெருக்க முடியும்.
4. சூரிய சக்தியின் மூலம் சோலார் பம்புகள் இயங்குவதால் டீசல் செலவு குறையும்.
5. சோலார் பம்புகளை பயன்படுத்துவதன் மூலம், இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
6. விவசாயிகளுக்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் வருமான பாதுகாப்பை ஒன்றாக வழங்கும் திட்டமாக பிஎம் குசும் யோஜனா 2.0 திட்டம் திகழும்.