

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம்தேதி தொடங்கிய நிலையில் நாளை பிப்ரவரி 1-ம்தேதி 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் வரும் பிப்ரவரி 1-ம்தேதி ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணத்தில் அளித்து வந்த சலுகை மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. தொலைதூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரெயில்களிலேயே அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருவதால், அவர்களுக்கு பல்வேறு வசதிகளையும் இந்தியன் ரெயில்வே செய்து வருகிறது.
குறிப்பாக, பெண்கள், மூத்த குடிமக்களின் பயணத்தை எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியன் ரெயில்வே எடுத்து வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு அதிக கவனம் செலுத்த அவர்களுக்கு படுக்கை வசதி வரையிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அவர்களுக்கு கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் ரெயில்களில் சிரமமின்றி ஏறி, இறங்கவும் அவர்களுக்கு பிரத்யேகமாக சக்கர நாற்காலிகளும் உள்ளன. இவ்வாறு மூத்த குடிமக்களுக்கு இந்தியன் ரெயில்வே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
முன்பு ரெயிலில் பயணிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியையும் இந்தியன் ரெயில்வே வழங்கி வந்தது.
இந்த சலுகையால் ரெயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் 1,600 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை செலவானது. ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ரெயில் சேவைகள் முடக்கப்பட்ட போது, நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த சலுகை கடந்த 6 ஆண்டுகளாக அது அப்படியே நிறுத்தப்பட்டது.
பல்வேறு காலகட்டங்களில் அந்த சலுகை மீண்டும் கிடைக்குமா என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையிலும் மத்திய அரசு அதுகுறித்து பேசாமல் மௌனமாகவே இருந்தது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம்தேதி (நாளை ) தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2026-ல், இதற்கான முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறிவருகின்றன. நிதி அமைச்சகத்திற்கும் ரெயில்வே துறைக்கும் இடையே இது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்ததாகவும் மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சலுகையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இரு அமைச்சகங்களும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்திய ரெயில்வே, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய பெண்களுக்கு 50% தள்ளுபடியும் கட்டணச் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது. இது ஸ்லீப்பர், 3AC, 2AC மற்றும் 1AC உள்ளிட்ட பெரும்பாலான வகுப்பு பயணங்களுக்கு பொருந்தும்.
இதற்கு, IRCTC இணையதளம் அல்லது முன்பதிவு மையங்களில் முதியோர் அவர்களது வயதைக் குறிப்பிட்டாலே போதுமானது. இதற்காக தனியாக அடையாள அட்டைகளோ அல்லது கூடுதல் ஆவணங்களோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வரும் பட்ஜெட்டில், 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட முதியவர்களுக்கான கட்டண சலுகையானது மீண்டும் கொண்டு வரப்படுமா அல்லது பழையபடி முழு தள்ளுபடி அல்லது குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் 3AC வகுப்புகளுக்காவது சலுகை மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு மூத்த குடிமக்களிடையே அதிகரித்துள்ளது.
அப்படி கொண்டுவரும் பட்சத்தில் வயதான காலத்தில் நிலையான வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு செலவுகள் குறைவதோடு, பொருளாதார ரீதியாக பக்கபலமாகவும், பெரும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.