நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28-ம்தேதி தொடங்கும் நிலையில் இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஜனவரி 18-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம்தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வும், மார்ச் 9-ம்தேதி முதல் ஏப்ரல் 2-ம்தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 28-ம்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று (29-ம் தேதி) பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வரும் பிப்ரவரி 1-ம்தேதி 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் வரும் பிப்ரவரி 1-ம்தேதி ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எந்தெந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்? எந்த பொருட்களின் விலை குறையும், எவை விலை கூடும்? தனிநபர் வருமான வரி, வட்டி விகிதங்கள், வீட்டி வசதி, சுகாதாரத் துறை என எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற பல்வேறு எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் பொதுமக்கள் முதல் பல்வேறு துறை வல்லுநர்கள் வரை பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.
பல பெரிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின் படி, இந்தாண்டு மக்கள் பிரமாண்டமான அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, செலவழிக்கும் திறனை மேம்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீண்டகால வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
குறைந்த வரி விகிதங்கள் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு செலவழிப்பு வருமானத்தை அதிகரிப்பதாகவும், செலவினங்களை ஆதரிப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் PM கிசான், பயிர் காப்பீடு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் அதிகரித்த நிதியை எதிர்பார்க்கின்றனர்.
தொழில்துறை வளர்ச்சிக்கு கொள்கை ஆதரவு, வரி தளர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கிறது.
தனிநபர் வருமான வரியில் கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பது ஆட்டோமொபைல் துறையின் மற்றொரு முக்கிய கோரிக்கையாகும்.
2026 பட்ஜெட் இந்திய சில்லறை விற்பனைத் துறைக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விலையுயர்ந்த வீட்டு உபகரணங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் குறைத்தால், இந்தத் துறை கணிசமாக பயனடையும். அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் சாதகங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் மானியம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் இந்த பொருட்களின் விலை ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
வரிச் சலுகைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சொகுசு கார்கள் மற்றும் மதுபானங்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. வருமான வரிச் சலுகைகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கலாம்.
இந்த பட்ஜெட்டில் வீட்டுவசதி சார்ந்த பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திடீர் திடீரென அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விலை பணவீக்கமும் பொதுமக்களிடையே ஒரு முக்கிய கவலையாக உள்ளது. இல்லத்தரசிகளின் முதன்மையான கோரிக்கை சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதாகும். தக்காளி, வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பது நடுத்தர மக்களுக்கு மன அழுத்தத்தை அளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு VB-G RAM G போன்ற புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளது. இது இல்லத்தரசிகளின் வருமானத்தைப் பெருக்குவதுடன், குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டிலிருந்து ரியல் எஸ்டேட் துறையின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மலிவு மற்றும் நடுத்தர வருமான வீடுகள். அதேபோல் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தும் மற்றொரு துறையாக வீட்டுவசதி உள்ளது. அந்த வகையில் மலிவு விலை வீட்டு வரம்பை ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தவும், நகர அளவை அடிப்படையாகக் கொண்டு வரையறைகளை சரிசெய்யவும் சிஐஐ பரிந்துரைத்துள்ளது. வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும், வருமான வரி பிரிவுகள் 80C மற்றும் 24(B) இன் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.