

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் தற்போது மத்திய பட்ஜெட் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் (பிப்ரவரி 01) வெளியாக இருக்கிறது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் முதலீட்டாளர்களும், மாதச் சம்பளம் வாங்குவோரும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு என்னன்னெ அறிவிப்புகள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தது மத்திய அரசு. கிட்டத்தட்ட 9% வரி குறைக்கப்பட்டதன் காரணமாக, தங்கத்தின் விலையிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. வரிக் குறைப்பால் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை தங்கத்தின் விலையும் குறைந்தது.
தங்கக் கடத்தலை தடுக்கும் விதமாகவே இந்த வரிக் குறைப்பு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மாதங்களிலேயே தங்கக் கடத்தல் அதிகரித்து விட்டதாகவும், அதில் பல கடத்தல்களை சிபிஐ மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் தடுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தினந்தினம் புதிய உச்சத்தை அடைவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தாலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பேரதிர்ச்சியை மட்டுமே கொடுத்து வருகிறது.
நிச்சயமற்ற பொருளாதார சூழல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலரின் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க வங்கிகள் கூட்டம் மற்றும் இந்தியாவின் மத்திய பட்ஜெட் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
நாளை (ஜனவரி 27) மற்றும் நாளை (ஜனவரி 28) மறுதினம் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வட்டிக் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வட்டி குறைக்கப்படவில்லை என்றாலும், தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் சுங்க வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது
சுங்க வரியை மத்திய அரசு குறைத்தால் நிச்சயமாக தங்கத்தின் விலையில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை குறைய வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி என மொத்தமாக 10% வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக சுங்க வரியை 50%, அதாவது 6% இலிருந்து 3% ஆக குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுமட்டும் நடந்தால், நிச்சயமாக தங்கத்தின் விலை கணிசமாக குறையும். அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டம் மற்றும் இந்தியாவின் மத்திய பட்ஜெட் ஆகிய 2 நிகழ்வுகளே தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் இந்த இரு பெரும் நிகழ்வுகளின் காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் நிகழ கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.