மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் பட்ஜெட் தள்ளிவைப்பு!

மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் பட்ஜெட் தள்ளிவைப்பு!
Published on

டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில், ‘பட்ஜெட் தாக்கல் இன்று கிடையாது’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘'இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது'' என்று குற்றம் சுமத்தி உள்ளார்.

டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ம் தேதி தொடங்கியது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பின்னர், நிதித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட கைலாஷ் கெஹ்லோட், கடந்த மார்ச் 10ம் தேதியே பட்ஜெட் தொடர்பான கோப்புக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதன் பிறகு பட்ஜெட் தொடர்பாக சில காரணங்களைச் சொல்லி, மார்ச் 17 அன்று டெல்லி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதமொன்றை அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அக்கடிதத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்திருப்பதாக கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு டெல்லியில் அமைந்ததில் இருந்து இதுவரை எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நிதி அமைச்சராக மணீஷ் சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 26ம் தேதி கலால் கொள்ளை முறைகேடு வழக்கில் தொடர்பாக சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் இந்த ஆண்டு அவரால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை. கைதான பிறகு பிப்ரவரி 28ம் தேதி சிசோடியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் டெல்லி பட்ஜெட்டின் முழு வடிவமும் மணீஷ் சிசோடியா தலைமையில்தான் தயாரிக்கப்பட்டது. சிறைக்குச் செல்வதற்கு முன், இந்த பட்ஜெட் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் சிசோடியா முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்த வருட பட்ஜெட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாதலால் டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என்றும், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com