

தமிழ்நாட்டில் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன்படி மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சொந்த வீடு கட்டி வரும் சாமானிய மக்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் நிதி நெருக்கடி ஏற்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொலைவைப் பொருத்து விலையேற்றத்தில் சிறிது மாறுதல் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.3,300-க்கு விற்பனையாகி வந்த ஒரு யூனிட் ஜல்லி, தற்போது ரூ.500 உயர்ந்து ரூ.3,800க்கு விற்பனையாகிறது.
ரூ.4,000-க்கு விற்பனையான ஒரு யூனிட் எம்-சாண்ட், ரூ.500 உயர்ந்து ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.
ரூ.5,000-க்கு விற்பனையான ஒரு யூனிட் பி-சாண்ட், ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனையாகிறது.
விலை உயர்வுக்கான காரணங்கள்:
1. டீசல் விலை உயர்வு:
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, தற்போது விலை உயர்த்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக குவாரிகளில் இருந்து கட்டுமான பொருட்களை இயற்றி வரும் லாரிகளின் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
2. குவாரிகள் மூடல்:
சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.பிரபு முறையான ஆவணங்கள் இன்றி இயங்கும் பல குவாரிகளை தற்காலிகமாக மூடியுள்ளார். இதன் காரணமாக உற்பத்தி தடைபட்டுள்ளது.
3. மூலப்பொருட்கள் விலை உயர்வு:
கட்டுமான பொருட்களைத் தயாரிப்பதற்கான இயந்திரங்களை இயக்குவதற்கான எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன. அதோடு மூலப்பொருட்களின் விலை உயர்வும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கட்டுமான பொருட்களின் இந்த விலை உயர்வு, சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பட்ஜெட் போட்டு சொந்த வீட்டை கட்டி வரும் பொதுமக்கள் இந்த விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதோடு கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கும் இந்த விலை உயர்வு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அதோடு கட்டுமான நிறுவனங்களின் லாபத்தையும் இந்த விலை உயர்வு பதம் பார்க்கும்.
விலை உயர்விலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்:
தமிழ்நாட்டின் தொழில்துறை வேகமாக முன்னேறி வரும் சூழலில் தற்போது கட்டுமான பொருட்களின் இந்த விலை உயர்வால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் விலை 5% முதல் 8% வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலப் பொருட்கள் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகளும் தாமதமாகும்.
இந்த விலை உயர்விலிருந்து தப்பிக்க நாம் சில மாற்றுப் வழிகளைத் தேட வேண்டியது அவசியம். ப்ரீகேஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பம் மற்றும் பிளை ஆஷ் செங்கற்களைப் பயன்படுத்துவது சிறந்த மாற்று வழியாக இருக்கும்.
நீண்ட கால ஒப்பந்தங்களின் மூலம், கட்டுமானப் பொருட்களின் தேவையை முன்பே நாம் பதிவு செய்து கொள்வது, இந்த மாதிரியான விலை உயர்விலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.
பட்ஜெட் போட்டு வீடு கட்டுவோர், வீண் செலவுகளைக் குறைத்து கட்டுமான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் மூண்டுள்ள போர் காரணமாக டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆகையால் கட்டுமானப் பொருட்களின் விலையும் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.