சத்தீஸ்கரில் பஸ் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரழிந்தவர்களுக்கு பிரதமர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கரில் உள்ள ராய்பூர் – துர்க் சாலையில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. 50 பேர் பயணித்த இந்தப் பேருந்தில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது அந்தச் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பேருந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்று 50 அடி பள்ளத்தில் விழுந்திருக்கிறது. இது Gediya Dsitillery என்ற நிறுவனத்தின் பேருந்தாகும். இதில் பயணித்த 40 பேர் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் ஆவார்கள்.
இதனையடுத்து Gediya Dsitillery நிறுவனம் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் இன்னொருவருக்கு நிறுவனத்தில் வேலை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரின் மருத்துவ செலவையும் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சென்னைக்கு பிரச்சாரம் செய்ய வந்துள்ள மோதி தனது X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் குறிப்பிடுள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவும் X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது, “இந்த விபத்து வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்ற கோர விபத்து ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.