Modi's Chennai Road Show - Unreleased Background Information
Modi's Chennai Road Show - Unreleased Background Informationhttps://www.thehindu.com

மோடியின் சென்னை ரோடு ஷோ - வெளிவராத பின்னணி பரபர தகவல்கள்!

Published on

மிழகத் தேர்தல் களத்தில் முந்தைய தேர்தல்களின்போது தெருமுனைக் கூட்டம், பிரச்சாரக் கூட்டம், பேரணிகள், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு போன்ற பல யுக்திகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த ரோடு ஷோ என்பது தமிழ்நாட்டுக்குப் புதுசு! முன்பு கோவையில் ஒன்று நடந்தது! இப்போது சென்னையில்!

மத்திய சென்னை, தென் சென்னை என இரு முக்கியமான பாராளுமன்றத் தொகுதிகளுக்குப் பொதுவான ஏரியாவாக தி. நகர் பாண்டி பஜாரை, ரோடு ஷோவுக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தது பாஜகவின் புத்திசாலித்தனம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதீத கவனம் செலுத்தப்பட்டது, அதிகப் பணம் செலவழிக்கப்பட்டது பாண்டி பஜார்தான் என்பதை கவனத்தில் கொள்க. அகலமான சாலை; வெகு அகலமான பிளாட்பாரங்கள். ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் இன்னபிற… இன்னபிற...

கடந்த வாரம் பாண்டி பஜாரின் பெரிய பெரிய மரங்களின் கிளைகளை வெட்டி சீர்படுத்தினார்கள். கேட்டபோது, ‘மோடியின் ரோடு ஷோவுக்காக பாதுகாப்பு ஏற்பாடு’ என்று சொன்னார்கள்! அதன் பிறகு இரண்டு நாட்கள் பாண்டி பஜார் முழுக்க வண்ண விளக்குகள், தோரணங்கள் என ஜொலித்தது. ஆனால், அவை எல்லாம் ஒரு சினிமா பாடல் ஷூட்டிங்கிற்குத்தான். ஷூட்டிங் முடிந்த கையோடு அவர்கள் எல்லாவற்ரையும் துப்புறவாக கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள்.

அடுத்து, பாண்டி பஜார் பகுதியில் காக்கி நடமாட்டம் அதிகமானது. லாரிகளில் தடுப்பான்கள் வந்து இறங்கின. பிளாட் பாரத்தை ஒட்டி ஒன்று, அடுத்து நாலடி தள்ளி சாலையில் ஒன்று என இரண்டு அடுக்கு பாதுகாப்பாக தடுப்பான்களை வைத்தார்கள். இன்னொரு பக்கம், பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் பூ விற்கும், பாசி மணி விற்கும், வேக வைத்த அமெரிக்கன் மக்காச்சோளம் விற்கும் பெண்மணிகள், சின்னச் சின்ன பிளாட்பார வியாபாரிகளை மோடி வரும் நாளன்றும், அதற்கு முந்தைய நாளும் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். பெரிய கடைக்காரர்களிடம் மூட வேண்டிய அவசியமில்லை; ஆனால், மூடிவிடுவது உசிதம் என அன்புக் கட்டளை இட்டது போலீஸ்.

ஒவ்வொரு கடையிலும் ஊழியர்கள் பட்டியலை எடுத்து, அவர்களைப் பற்றி தீர விசாரித்தது போலீஸ். அவர்களுக்கு ஸ்பெஷல் அடையாள அட்டையும் கொடுத்தார்கள். மால்களின் மீதும் கொஞ்சம் எக்ஸ்டிரா கண்காணிப்பு இருந்தது.

Modi Road Show
Modi Road Showhttps://www.thehindu.com

ரோடு ஷோவுக்கு முதல் நாள் மாலை, ஒரு ஒத்திகை நடத்தினார்கள். மோடி பயணிக்கவிருந்த பூ அலங்காரம் செய்த வண்ணமிகு ஜீப்பில் டம்மியாக மூன்று பேரை நிற்கவைத்து, முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் வர மொத்த கான்வாயும் மெள்ள ஊர்ந்து சென்றார்கள். பாண்டி பஜார் முழுக்க, ‘எங்கெங்கு காணினும் காக்கியடா!’ மொத்தம் மூவாயிரத்து ஐநூறு போலீசார் மோடியின் ரோடு ஷோவுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாண்டி பஜாரை ஒட்டிய ஜி.என்.செட்டி ரோடு, வெங்கட் நாராயண ரோடு, வடக்கு போக் ரோடு, நாயர் ரோடு ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தத் தடை! ஏகப்பட்ட போக்குவரத்து கெடுபிடிகள்! மாலை ஆறு மணிக்குத்தான் நிகழ்ச்சி என்றாலும், பகல் இரண்டு மணி முதலே பாண்டி பஜாரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடா!

இரவு முழுக்கக் கட்சிக்காரர்களும், காண்டிராக்டர்களும் வேலை பார்த்து, பனகல் பார்க்கை ஒட்டிய பகுதியில் விதவிதமாக பிரதமரின் ஃப்ளெக்ஸ் படங்களைப் பொருத்தினார்கள். அடுத்து பாண்டி பஜார் முழுக்க இரு பக்கங்களிலும் மோடியின் மீடியம் சைஸ் கட் அவுட்கள். கூடவே போனால்போகிறது என்று ஜே.பி.நட்டாவுக்கும், அமித் ஷாவுக்கும் சில கட் அவுட்கள்! பனகல் பார்க் தொடங்கி தேனாம்பேட்டை சிக்னல் வரை, செண்டை மேளம் வாசிக்க ஆங்காங்கே மேடை அமைத்திருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் வயது மூப்பினால் காலமானார்!
Modi's Chennai Road Show - Unreleased Background Information

“இது பிரதமரின் மிக முக்கியமான தேர்தல் பிரச்சார நிகழ்வு! பார்க்க வரும் மக்களுக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்பட்டுவிடக் கூடாது!” என்று பாஜக தரப்பில் போலீசுக்கு சொல்லப்பட்டதாம்! “பிரதமரது பாதுகாப்பு சம்பந்தமான எந்த விஷயத்திலும் அஜாக்கிரதையாக இருக்க முடியாது! இதை நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்!” என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாம்!

logo
Kalki Online
kalkionline.com