நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 43 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, மஹாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன், மாநில அரசு நேபாள நிர்வாகத்துடனும், டெல்லி தூதரகத்துடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 43 பேர் பேருந்தில் 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். அந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். 12 பேர் நேபாள ராணுவத்தால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் மட்டும் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
படுகாயமடைந்த அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தனாஹூன் மாவட்டத்தின் டிஎஸ்பி பேசியதாவது, “UP FT 7623 என்ற உத்தரப்பிரதேச மாநில பதிவெண் கொண்ட அந்தப் பேருந்து மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.” என்றார்.
45 போலீஸார் கொண்ட ஒரு குழு, விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து புனிதப்பயணம் மேற்கொண்டவர்களை அழைத்துச் செல்ல பேருந்து கொடுத்த கோராக்பூர் கேசர்வானி டிராவல்ஸ் அதிபர் விஷ்னு கேசர்வானி இது குறித்து கூறுகையில், ''பிரயக்ராஜ் என்ற இடத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. அங்கிருந்து சித்ரகூட், அயோத்தி, கோரக்பூர், சோனவ்லி, லும்பினி ஆகிய இடங்களை பார்த்துவிட்டு நேபாளத்தில் உள்ள போகாராவிற்கு சென்றனர். அங்கும் பார்த்துவிட்டு காட்மாண்டுவிற்கு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.'' என்றார்.