

BYD நிறுவனம் இந்தியாவில் தனது DM-i (Dual Mode Intelligent) பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கான புதிய தளத்தை (platform) அடிப்படையாகக் கொண்ட முதல் மாடல் 'Seal U' பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி (SUV) ஆக இருக்கும் என்றும், இது இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகவுள்ளது என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
BYD (Build Your Dreams) என்பது மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒரு சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். 1995-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், புதிய ஆற்றல் (New Energy) மற்றும் ரயில் போக்குவரத்து ஆகிய நான்கு முக்கிய துறைகளில் இயங்கி வருகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் பூஜ்ஜிய உமிழ்வு (Zero-emission) வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் இந்நிறுவனம் டெஸ்லா நிறுவனத்திற்கு உலகளவில் கடுமையான போட்டியாக விளங்குகிறது.
உலகளவில் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக இருந்த டெஸ்லாவை பின்தள்ளி தற்போது உலகளவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை குறைவான விலையில் விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது BYD. சர்வதேசச் சந்தைகளைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஜாம்பாவான்களும் மோதிக்கொள்ளவிருக்கின்றன.
உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது விற்பனை மற்றும் உற்பத்தி மையங்களை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காகப் புகழ்பெற்ற மேம்பட்ட 'Blade Battery' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய மின்சார வாகன சந்தையிலும் வேகமாக வளர்ந்து வரும் BYD நிறுவனம், இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் வகையில் புதிய எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹைதராபாத்தில், சுமார் ரூ.85,000 கோடி முதலீட்டில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்க BYD திட்டமிட்டிருக்கிறதாம்.
எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, அதற்கான பேட்டரிக்களைத் தயாரிக்கவும் தனியே ஒரு யூனிட் அமைக்கவிருக்கிறதாம் BYD. இந்த தொழிற்சாலை, டெஸ்லாவிற்கு மட்டுமல்ல, இந்திய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களானடாடா, மஹிந்திரா மற்றும் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி என அனைவருக்குமே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
BYD தற்போது இந்தியாவில் Atto 3, Seal sedan, eMAX 7 மற்றும் Sealion 7 ஆகிய நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. Seal U மற்றும் DM-i தொழில்நுட்பத்தின் அறிமுகம், நிறுவனத்தின் தற்போதைய மின்சார வாகன வரிசையை வலுப்படுத்துவதோடு, புதியதொரு சந்தைப் பிரிவிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவும்.
மேலும் இந்திய சந்தைக்கான தனது 'பிளக்-இன் ஹைப்ரிட்' (plug-in hybrid) கார் மாடலை இன்று (ஜூன் 9ம்தேதி)அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹைப்ரிட் வாகனப் பிரிவில் நுழைய BYD திட்டமிட்டுள்ளது.
இதுவரை எலக்ட்ரிக் கார்களை மட்டுமே வழங்கி வந்த இந்நிறுவனம், தற்போது தனது 'DM-i சூப்பர் பிளக்-இன் ஹைப்ரிட்' (DM-i Super Plug-In Hybrid) தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
BYD நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற 'Auto Expo'-வில் Sealion 6-ஐ காட்சிப்படுத்தியிருந்தது. BYD Sealion 6 ஆனது 4,775 மிமீ நீளம், 1,890 மிமீ அகலம், 1,670 மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் (wheelbase) அளவு 2,765 மிமீ ஆகும். இது வழக்கமான SUV-யைப் போன்ற வடிவமைப்பையும், BYD-க்கே உரித்தான வடிவமைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் நேர்த்தியான LED ஹெட்லேம்ப்கள் (LED DRL-களுடன்) மற்றும் பார்க்கிங் சென்சார்கள், கேமராக்கள் கொண்ட ஸ்போர்ட்டியான தோற்றமளிக்கும் பம்பர் ஆகியவை உள்ளன.
இந்த கார், DM-i எனப்படும் சூப்பர் ப்ளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம், பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கையும் இணைத்து, அதிக தூரம் பயணிக்கும் திறன் மற்றும் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த SUV-யில் லெதரெட் (leatherette) இருக்கைகள், மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் 15.6 அங்குல சுழலும் தன்மை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன.
பெரும்பாலான சீன நிறுவனங்களைப் போலவே, BYD-யும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு ஏர்பேக்குகள், ADAS, 360-டிகிரி கேமரா, 10 ஸ்பீக்கர்கள், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்ட்-சீட் மவுண்ட்கள் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளது.
இதில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து, எரிபொருள் நிரப்பினால் சுமார் 1000 முதல் 1100 கி.மீ வரை தடையின்றி பயணிக்க முடியும். நீண்ட தூரப் பயணங்களின்போது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, அதே வேளையில் செயல்திறனை அதிகபட்சமாக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக BYD நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எலக்ட்ரிக் காரின் அமைதியான மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தையும், வழக்கமான எரிபொருள் காரின் நீண்ட தூரப் பயண வசதியையும் ஒருங்கிணைக்கிறது.
முழுமையாக சார்ஜிங் உள்கட்டமைப்பைச் சார்ந்திருக்காமல், அதே சமயம் மின்சார வாகனப் பயணத்தின் நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும்.