

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் கடந்த மாதம் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் இன்னும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8-வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்தூரில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் குடிநீர் தரம் குறித்த கவலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
டெல்லி மக்கள் தற்போது பருகும் நிலத்தடி நீர் குடிக்கத் தகுதியற்றது என்றும், அது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசின் தலைமை தணிக்கையாளர் (CAG) ஜனவரி 7, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தணிக்கையின் (CAG) மிகவும் கவலைக்குரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, தணிக்கை காலத்தில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி நீர் மாதிரிகள் குடிநீர் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். CAG அறிக்கையின்படி, டெல்லி முழுவதும் சேகரிக்கப்பட்ட 16,234 நிலத்தடி நீர் மாதிரிகளில், 8,933 மாதிரிகளில், கிட்டத்தட்ட 55 சதவீதம் மனித நுகர்வுக்கு பாதுகாப்பற்றவை என்று கண்டறியப்பட்டது.
டெல்லிக்கு 1,680 மில்லியன் யூனிட் நீர் தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 25 சதவீத பற்றாக்குறையை எதிர்கொண்டதாக தணிக்கை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், டெல்லி ஜல் போர்டு (DJB) ஆய்வகங்களில் போதுமான ஊழியர்களும், நவீன உபகரணங்களும் இல்லாததாலும், குடிநீரின் தரம் சரியாகப் பரிசோதிக்கப்படாததாலும் நீரின் உண்மையான தரம் பெரும்பாலும் தெரியவில்லை. CAG அறிக்கை, டெல்லி ஜல் போர்டு (JSAI) நீர் சோதனை, சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் தோல்விகளைச் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளில் இருந்து நாளொன்றுக்கு 80 முதல் 90 மில்லியன் கேலன் தண்ணீர் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது.
சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீரை நேரடியாக வழங்குவது, நீரினால் பரவும் நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
DJB ஆய்வகங்களில், நச்சுப் பொருட்கள், கதிரியக்கக் கூறுகள், வைராலஜிக்கல் மாசுபாடுகள் மற்றும் ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களுக்கான முக்கியமான சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
தடைசெய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் பாலிஎலக்ட்ரோலைட்டு பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் தனியார் நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையங்கள் தொடர்ந்து இந்த ரசாயனங்கள் பயன்படுத்தி வருவதாக தணிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடிநீரில் கதிரியக்க பொருட்கள் மற்றும் கன உலோகங்கள் இருப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், இந்த அசுத்தமான நீரைப் தொடர்ந்து பருகும் டெல்லி மக்களுக்கு உறுப்பு சேதம், இரத்த சோகை மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும், இந்த சோதனைகளை நடத்தத் தவறினால் டெல்லிவாசிகள் கடுமையான நீண்டகால சுகாதார விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் CAG எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் 'ஜன் ஸ்வஸ்திய அபியான் இந்தியா' (JSAI) அமைப்பு தலையிட்டு, டெல்லி அரசு மற்றும் டெல்லி ஜல் போர்டு ஆகியவற்றுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
* சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீர் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
* பி.ஐ.எஸ் (BIS) தரநிலைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
* தண்ணீர் பரிசோதனை ஆய்வகங்களில் போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
* ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் தர பரிசோதனையை கட்டாயமாக்குதல்.
* குடிநீர் தரம் குறித்த தரவுகளைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
பாதுகாப்பான குடிநீரைப் பெறுவது ஒரு அடிப்படை உரிமை என்றும், அதை உறுதி செய்யத் தொடர்ந்து தவறுவது பொதுமக்களின் நம்பிக்கையை மீறுவதாகும் என்றும் JSAI வலியுறுத்தியது.
தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்காதது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.