

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பகீரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 பேர் தற்போது பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி கூடுதல் ஆணையர் ரோஹித் சிசோனியா கூறுகையில், பகீரத்புராவில் (Bhagirathpura) சேகரிக்கப்பட்ட 50 குடிநீர் மாதிரிகளில் 26 மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். குடிநீர் மாதிரிகளில் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு ஏற்பட்டுள்ள நீர் மாசுபாட்டை சரிசெய்ய இந்தூர் மாநகராட்சி (IMC) தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தண்ணீர் பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை பொதுமக்கள் குழாய் நீரை அருந்த வேண்டாம் என்றும், மாநகராட்சி வழங்கும் டேங்கர் நீரை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மத்திய பிரதேச மாநில அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாகீரத்புரா பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஒரு கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அதே இடத்திற்கு மிக அருகிலேயே கழிவுநீர் செல்லும் குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக, கழிவுகள் நேரடியாகக் குடிநீர் குழாய் மீது கசிந்து, குழாயில் இருந்த விரிசல் வழியாக உள்ளே புகுந்து குடிநீரை முழுமையாக நஞ்சாக மாற்றிய நிலையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பிரச்சனைக்கு காரணமான கழிவுநீர் செல்லும் குழாய்கள் இடிக்கப்பட்டு, குழாய் கசிவு சரிசெய்யப்பட்டுள்ளதாக சிசோனியா தெரிவித்தார்.
பகீரத்புரா பகுதியில் வசிக்கும் மக்கள் குழாய் நீர் நிறமாற்றத்துடனும் துர்நாற்றத்துடனும் வருவதைக் கவனித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பற்ற அலட்சியமே இன்று 10 பேரின் உயிரை பறித்துள்ளனது.
இந்தூர் பாகீரத்புராவில் நடந்த துயரமான சம்பவத்தைப் போல, சென்னையில் குடிநீர் நஞ்சாகாமல் இருக்க குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீரியல் நிபுணர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் தற்போதுள்ள குடிநீர் குழாய்கள் 40-50 ஆண்டுகள் பழமையானவை. இந்த பழைய குழாய்களில் எங்கு கசிவு அல்லது விரிசல் உள்ளது என்பதைக் கண்டறிய ரோபோடிக் கேமராக்களை பயன்படுத்த வேண்டும். இந்த பழைய குழாய்களில் எங்கு கசிவு அல்லது விரிசல் உள்ளது என்பதை, குழாயைத் தோண்டாமலேயே உள்ளே இருக்கும் விரிசல்களை ரோபோடிக் கேமராக்களை பயன்படுத்தி கண்டறிய முடியும்.
குழாய்களில் நீரின் அழுத்தம் திடீரென குறைந்தால், அங்கு கசிவு ஏற்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ளலாம். ஐஓடிசென்சார்களைப் பொருத்துவதன் மூலம், கசிவு ஏற்படும் இடத்தை உடனடியாகக் கண்டறிந்து, கழிவுநீர் கலப்பதற்கு முன்பே சரிசெய்ய முடியும்.
நீர்நிலைகளில் அல்லது மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீரைத் திறக்கும் லாரிகளால் நிலத்தடி நீர் மற்றும் குழாய் நீர் நஞ்சாகிவிடுகிறது. எனவே அனைத்து கழிவுநீர் லாரிகளிலும் GPS கருவி பொருத்தி, அவை முறையாக சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
குடிநீரின் நிறம் மாறியிருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ, பொதுமக்கள் தாமதிக்காமல் உடனடியாக குடிநீர் வாரியத்தின் எண்களில் (044-4567 4567) தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வேண்டும்.
இந்தூர் சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் நீர் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம் என்பதாகும்.