கனடாவில் புதிய கூட்டாட்சி கொள்கை காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக, இந்திய மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்திய மாணவர்கள் பலர் கனடாவில் கல்வி பயின்று வருகிறார்கள். ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கைகள் நிரந்தர குடியுரிமை நியமனங்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைப்பது மற்றும் படிப்பு அனுமதிகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் தலைவலியாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியர்கள் அங்கு அதிகம் வசிப்பதாலும், அதிக இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாலும் அவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால், கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் உள்ள சட்டப் பேரவையின் முன் இந்திய மாணவர்கள் முகாமிட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த திடீர் கொள்கை மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அங்கு மட்டுமல்ல, இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களிலும் இந்த போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கனடா மக்கள்தொகை மிக அதிகளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்த மக்கள்தொகை அதிகரிப்பில் சுமார் 97 சதவிகிதம் அளவு குடியேற்றத்தால் ஏற்பட்டது. இதனால்தான், வெளிநாட்டிலிருந்து வந்து படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என அனைவரின் அனுமதி விகிதத்திற்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு (ESDC) கூற்றுப்படி, 2023 இல் 183,820 தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இது 2019 ஆம் ஆண்டிலிருந்து 88 சதவீதம் அதிகமாகும். மூன்று ஆண்டுகளில் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 5% ஆக தற்காலிக குடியிருப்பாளர்களைக் குறைக்க அரசாங்கம் மேலும் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
இந்த புதிய மாற்றங்களுக்கு பின், வேலையின்மை விகிதம் 6 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் பிராந்தியங்களில் பணி அனுமதி மறுக்கப்படும். ஆகையால், அனைத்து விதத்திலும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் செக் வைக்கப்பட்டதால், இந்த போராட்டம் வெடித்துள்ளது.