
கனடா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறந்த சம்பளம், நிலையான வேலைகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட ஒரு இடமாக கருதப்படுவதால் வெளிநாட்டு மோகம் இந்திய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என கனவு கண்டு அதனை நிறைவேற்றி கொள்ள தினமும் போராடும் வாலிபர்கள் இன்றளவும் உள்ளனர். இந்நிலையில் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று பலரின் வெளிநாட்டு மாயையை உடைத்து வருகிறது. அந்த வீடியோவில் கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலைமையும், அங்குள்ள வேலைவாய்ப்புகள் குறித்தான அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது கனடாவில் வசிக்கும் இந்தியப் பெண்ணான @kanutalescanada பகிர்ந்துள்ள இந்த வீடியோ, வெளிநாட்டில் வேலை தேடுவதன் அடிப்படை யதார்த்தத்தை காட்டுகிறது.
இந்தியாவை சேர்ந்தவர் கணு. கனடாவில் தங்கி பட்டப்படிப்பு படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் கனடாவில் வான்கூவர் நகரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றுக்கு சென்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். அதில் 5 பணி இடங்களுக்கு இந்திய, வெளிநாட்டு இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்காணலை சந்திக்க உள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக கால்கடுக்க காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து வீடியோவில் பேசிய கணு, ‘கனடாவில் நிறைய வேலையும், பணமும் இருப்பதாக நினைக்கும் இந்திய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த வீடியோ பதிவை காட்டுங்கள். இதுதான் கனடாவின் மறுமுகம். இதற்கு தயார் என்றால் கனடா வாருங்கள், இல்லையெனில் இந்தியாவே சிறந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.
‘வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் ஒரு கனவு அல்ல. சில நேரங்களில் அது வெறும்... நீண்ட வரிசையாக இருக்கும்" என்று சமூக வலைதளத்தில் கணு பதிவிட்ட வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பதிவு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துவிட்டது. பயனர்கள் இந்த வீடியோவுக்கு பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் சிலர் நேர்மறையாகவும், சிலர் எதிர்மறையாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர் ‘கனடாவுக்குச் செல்ல மக்களுக்கு தவறான தகவல்களையும் தோற்றத்தையும் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த வீடியோ உண்மையை உணர்த்தும்’ என்றும், மற்றொரு பயனர், ‘மக்கள் நீண்ட வரிசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை..
அவர்கள் பின்னால் இருக்கும் ஆடம்பரமான கப்பலையும் அழகான கட்டிடங்களையும் பார்ப்பார்கள்’ என்று கருத்து தெரிவித்தார்.
மூன்றாவது பயனர், ‘தனது நண்பர்களுடன் அரிட்சியா கிடங்கு விற்பனை பணியமர்த்தல் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு சென்றதாகவும், அங்கு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் குறுகிய கால வேலைகளுக்காக சுமார் 800 முதல் 1000 பேர் வந்திருந்ததாகவும் கூறினார். காத்திருபோரின் வரிசை மிக நீண்டதாக இருந்தாகவும், அதில் பல இந்தியர்கள் இருந்ததாகவும் கூறிய அவர், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட கோடை விடுமுறையில் இங்கு வேலை செய்ய வந்தாகவும் கூறினார்.
நானும் என் நண்பர்களும் அங்கு சென்றோம், எனக்கு வேலை இருக்கிறது, இது ஒரு முயற்சி மட்டுமே, கிடைத்தால் நல்லது, இல்லையென்றால் என் படிப்பை தொடர்வேன் என்ற அவர், நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு என் நண்பர்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது என்றார். எனவே, நீங்கள் ரீல்களில் பார்ப்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதையும் தீர்மானிக்க வேண்டாம். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் நேர்மறையாக இருங்கள், முயற்சித்துப் பாருங்கள்’ என்று அந்த பயனர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு பலரும் சரி என்றும், முயற்சி செய்வது தவறில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.