சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்களை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளது.
2006 - 11ல் திமுக அரசின் அமைச்சர்களாக தங்கம் தென்னரசுவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் பணியாற்றினர். 2012 ஆம் ஆண்டு 76.40 லட்ச ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும், 44.56 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது.
வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று வழங்கினார்.
அமைச்சர்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி வெங்கடேஷ் மீண்டும் வழக்கை விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட விடுதலை உத்தரவை ரத்து செய்து மறு விசாரணைக்கு ஆணையிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோன்று முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வளர்மதி மீதான சூமோட்டா வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.