உலகளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
நோய்களிலேயே மிகவும் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய், பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்து அணு அணுவாகக் கொல்லும். இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்கலாமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது. புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் பல பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். இந்த புற்றுநோய்களில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. இரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய் என உடலின் அனைத்து பாகங்களிலும் ஏற்படுகிறது.
புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த எந்த வித சிகிச்சையும் இல்லை. வராமல் தடுக்கவும் எந்த ஒரு தடுப்பூசிகளும் இல்லாமல் இருந்தன. இதனால், ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
ஆகையால், இன்றளவும் பல நாடுகளில் மருத்துவர்கள் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து சாதனை படைத்தது.
இப்படியான நிலையில், ஒரு அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக பிரித்து புற்றுநோய்க்கான ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் 3 பேர் உயிரிழப்பதாகவும், அதில் பெண்கள்தான் அதிகம் என்றும் இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களின் 10 சதவீதத்துடன் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. மார்பக புற்றுநோயால் 30% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்படும் மரணம் 24% என்ற அளவிலும் உள்ளது.
கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10% பெண்களில் 20% அளவிற்கு இறப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் வாய் புற்றுநோய் பாதிப்பு 16% பேரிடம் இருப்பதாகவும் சுவாசம் மற்றும் உணவுக்குழாய் பாதிப்பு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோயால் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.