

புற்றுநோய் சிகிச்சைக்கான, 543 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று திருத்தியமைத்துள்ளது.திருத்தப்பட்ட விலைகள், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைச் செலவு மற்றும் மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை எளிய மக்களுக்கும் மலிவானதாக மாற்றவும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி 137 அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான லாப வரம்பைச் சீரமைப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் திருத்தப்பட்ட விலைப் பட்டியலைச் சமர்ப்பித்தன. இதன் அடிப்படையில், தற்போது 543 'பிராண்டு' புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைப் பட்டியலை (MRP) NPPA அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய குறைந்த விலைகள் வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
இந்த விலை மாற்றத்தின் மூலம் பல முக்கிய மருந்துகளின் விலை 70% முதல் 93% வரை குறைக்கப்பட்டுள்ளன:
மார்பகப் புற்றுநோய் மருந்து (Palbociclib): இதன் ஒரு பாக்கெட் விலை ₹40,421-ல் இருந்து அதிரடியாக குறைக்கப்பட்டு இனி ₹2,720-க்குக் கிடைக்கும்.
அனஸ்ட்ரோசோல் (Anastrozole): மார்பகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 10 மாத்திரைகளின் விலை ₹695.76-ல் இருந்து ₹73 ஆக குறைந்துள்ளது.
கீமோதெரபி மருந்து (Thiotepa): கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இம்மாத்திரையின் ஒரு குப்பி விலை ₹80,072-ல் இருந்து ₹7,150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புல்பிராக்கா & டாப்ருமாப் ஊசி மருந்துகள்: RPG லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து ₹26,072.16-ல் இருந்து ₹5,491 ஆகவும், டாப்ருமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,941 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பெவாசிசுமாப் & அசாசிடிடின்: அபோட் நிறுவனத்தின் பெவாசிசுமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,930.13 ஆகவும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசி மருந்து ₹6,337-ல் இருந்து ₹1,495.04 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
டசானத் 20 (Dasatinib): 60 மாத்திரைகள் கொண்ட தொகுப்பின் விலை ₹2,812.50-ல் இருந்து ₹1,085.93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Drug Name Old MRP (₹) Revised MRP (₹)
Anastrozole 695.76 73.00
Azacitidine 6,337.00 1,495.04
Bevacizumab 21,767.70 5,930.13
Dasatinib 2,812.50 1,085.93
Denosumab 22,031.25 5,941.00
Enzalutamide 6,578.20 2,232.00
Erlotinib 4,637.45 2,008.00
Fludarabine 14,235.00 2,432.00
Fulvestrant 26,072.16 5,491.00
மேலும் லென்வாடினிப், அபிராடெரோன், ஒலாபரிப் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளின் விலைகளும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், 'கீட்ரூடா' (Keytruda) என்ற உயர்தர மருந்தின் ஒரு குப்பி விலை ₹2,16,500 என்ற அளவிலும், 'ரிபோக்சிக்லிப்' (Ribociclib) மருந்தின் விலை ₹24,435 என்ற அளவிலும் மாற்றமின்றித் தொடர்கின்றன. அதேபோல டாக்ரிசோ, டெசென்ட்ரிக், டார்சலெக்ஸ், இம்பின்ஸி போன்ற சில இறக்குமதி மருந்துகளின் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை.
இந்த மருந்து விலை குறைப்பின் மூலம் புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுக்குச் சுமார் ₹2,500 கோடி வரை மருத்துவ செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், புற்றுநோய் சிகிச்சையில் மருந்துகள் மட்டுமின்றி அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை (Radiation), பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனை கட்டணங்கள் என பல செலவுகள் இருப்பதால், இந்த விலை குறைப்பின் பலன் நோயாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை அரசு கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.