

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்தப் போரில் தலைநகரங்களின் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தொடங்கிய நாள் முதல், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது ஈரான். இதன் காரணமாக உலகம் முழுக்க எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதற்கு சற்றும் பயப்படாத ஈரான், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரானின் மின்சார கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அது மீண்டும் கட்டமைக்கப்படும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி முழுவதுமாக மூடப்படும் என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானில் உள்ள மின் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், எதிரிகளின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளும் தாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அமெரிக்கப் படைகள் உள்ள நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளும் தாக்கப்படும். அதோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் எங்களது இலக்காக மாறும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகரான ஜெருசேலமில் உள்ள ஆராத் மற்றும் டிமோனா நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நேரடியாக இரு நாட்டு தலைநகரங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால், போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் எங்களுடன் இணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “4,000 கிலோ மீட்டர் வரை பாயும் வல்லமை கொண்ட ஈரானின் ஏவுகணை உலகிற்கே பேராபத்தை விளைவிக்க கூடும். உலக நாடுகள் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது. ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதலில் உலக நாடுகள் எங்களுடன் இணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலை சமாளித்து, இந்நாடுகளுக்கு எதிராக சமமான தாக்குதலையும் தொடுத்து வருகிறது ஈரான. ஏற்கனவே அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை தாக்கிய ஈரான், நேற்று F-15 போர் விமானத்தையும் தாக்கியுள்ளது.
பலம் வாய்ந்த அமெரிக்காவுக்கு நிகரான தனது பலத்தை போரில் ஈரான் நிரூபித்து வருவதால், போர் முடிவுக்கு வருவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே தெரிகிறது. மேலும் இந்தப் போர் இன்னும் சில மாதங்கள் நீடித்தால், உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சிக்கை விடுக்கப்பட்டுள்ளது.