
சமீப காலமாக நாட்டில் இரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக இரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சமீபத்தில் கூட மும்பையில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் இரயிலில் விபத்து ஏற்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் கிட்டத்தட்ட 5 பேருக்கும் மேல் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மின்சார இரயில்களிலும் கவச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மேற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.
பொதுவாக நீண்ட தொலைவு பயணிக்கும் விரைவு இரயில்களில் தான் கவச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து விரைவு இரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்சார இரயில்களில் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்படும் நடவடிக்கை பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மின்சார ரயில்களில் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட இருப்பது இதுதான் முதல்முறை.
இரயில் சென்று கொண்டிருக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், முன்கூட்டியே இரயில் ஓட்டுநருக்கு அலாரம் மூலம் கவச் தொழில்நுட்பம் எச்சரிக்கை விடுக்கும். இதன்மூலம் இரயில் விபத்தைத் தடுக்க முடியும். உள்நாட்டிலேயே தானியங்கி முறையில் செயல்படும் கவச் தொழில்நுட்பத்தை இந்தியன் இரயில்வே தான் உருவாக்கியது. உதாரணத்திற்கு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரயில்கள் வரும்போது கவச் தொழில்நுட்பம் எச்சரிக்கை விடுத்து, விபத்தைத் தவிர்க்க உதவும்.
கவச் தொழில்நுட்பம் அனைத்து இரயில்களிலும் பொருத்தப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு இறுதிக்குள் மின்சார இரயில்களில் கவச் தொழில்நுட்பத்தைப் பொருத்த மேற்கு இரயில்வே முடிவெடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கவச் தொழில்நுட்பம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்சார இரயில்களில் கவச் தொழில்நுட்பத்தைப் பொருத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. 2026 ஆண்டு இறுதிக்குள் மேற்கு இரயில்வேயின் அனைத்து மின்சார ரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்து விடும். இதன்மூலம் விபத்துகளை முன்கூட்டியே தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்தார்.