இனி கார் Sunroof-ல் குழந்தையை நிற்க வைத்தால் ரூ.1,000 அபராதம்! போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை..!!

காரின் சன்ரூஃபில் குழந்தைகளை ஆபத்தாக நிற்க வைத்தால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சன்ரூஃப் அபராதம்
kids standing car SunroofAI Image
Updated on

ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கார் வாங்கி அதில் சொகுசாக பயணிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. தற்போது குறைந்த விலையில் புதுப்புது மாடல் கார்கள் சந்தையில் வந்துள்ளதால் பலரும் தங்களுக்கும் பிடித்த காரை வாங்கி பயணித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்துக்கு ஏற்ப சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர்.

சமீபகாலமாக சிறுவர்கள் முதல் இளம் வயதினர் பலரும் சன்ரூப் (Sunroof) வசதி கொண்ட கார்களை வாங்கி பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காரில் பயணித்து கொண்டு இருக்கும்போதே பலரும் சன்ரூப் வழியாக காரின் மேற்பகுதிக்கு வந்து ரசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக காரின் சன் ரூஃபில் குழந்தைகள் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் குழந்தைகளை அதில் நிற்க வைத்து காரை ஓட்டும் சம்பவமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இது மகிழ்ச்சியை தந்தாலும் கூட இதில் ஆபத்துகள் நிறைய உள்ளது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். சன்ரூப் வழியாக வெளியே தலையை நீட்டி பயணிக்கும்போது சாலையில் பறக்கும் வண்டுகள் முகத்தில் வந்து கடிக்கலாம். பூச்சிகள் கண்களில் விழலாம். மின்சார ஒயர்கள் அல்லது பறவைகள் எதிர்பாராத விதமாக மோதுவதற்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி நகரும் காரின் சன்ரூஃப் (Sunroof) வழியாக வெளியே எட்டிப்பார்ப்பது அல்லது நிற்பது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். இதனால் சிலசமயம் அவர்களுக்கு கடுமையான காயங்கள், சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம்.

குழந்தைகள் மட்டுமன்றி சில நேரங்களில் பெரியவர்களும் கொண்டாட்டம் என்ற பெயரில் சன்ரூஃப் வழியே வெளியே ஏறி நின்று தங்களுக்குத் தாங்களே ஆபத்தைத் தேடிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரூஃப் பயன்பாடு வெளியே நிற்பதற்கு அல்ல என போக்குவரத்து போலீசார் பலமுறை அறிவுறுத்தியும், எச்சரிக்கை விடுத்தும் இந்த போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது போக்குவரத்து விதியாகும்.

ஆனால் சன்ரூஃப்பில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நிற்பதால் கார் திடீர் பிரேக் போடுதல், மரக்கிளைகள் அல்லது மேடான பகுதிகளில் வாகனம் செல்லும்போது ஏற்படும் மோதல்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலத்த காயமடைய நேரிடுகிறது.

சன்ரூஃப் அபராதம்
kids standing car SunroofAI Image

அதுமட்டுமின்றி அவ்வாறு சன்ரூஃப்பில் நிற்பவரின் ஆடை காரை ஓட்டுபவரின் முகத்தில் மூடி விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

கார்களின் சன்ரூஃப் என்பது காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓடும் வாகனத்தில் குழந்தைகள் சன்ரூஃப் வழியாக வெளியே நிற்பது அவர்களின் உயிரை பணயம் வைக்கும் செயலாகும். மேலும் சன்ரூஃப் வழியாக உடலை நீட்டுபவர்கள், மேலே உள்ள பேரிகார்டுகள், இரும்பு கம்பிகள் அல்லது பாலங்கள் மீது மோதி கடுமையான தலையாய காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகளே உஷார்: கடுமையாகும் போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள்..!
சன்ரூஃப் அபராதம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில், காரின் சன்ரூஃப் வழியாக தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்தபடி பயணித்த சிறுவன் ஒருவனின் தலை, குறுக்காக இருந்த இரும்பு கம்பியில் முட்டி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, காரின் சன்ரூஃபில் குழந்தைகளை ஆபத்தான முறையில் நிற்க வைக்கக்கூடாது என்றும், அவ்வாறு ஆபத்தான முறையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184-ன் கீழ் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையானது சென்னை மட்டுமன்றி மற்ற மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மோட்டார் சைக்கிள் - விபத்தைத் தவிர்க்க 10 பாதுகாப்பு விதிகள்!
சன்ரூஃப் அபராதம்

எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com