குரங்கம்மை என்பது ஒரு ஜுனோடிக் வைரஸ் நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய். இந்நோய் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வகக் குரங்கிலிருந்து முதன் முதலில் இந்த வைரஸ் எடுக்கப்பட்டதால் இதற்கு குரங்கம்மை எனப் பெயர் பெற்றது. குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை. இந்த குரங்கு அம்மை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது.
பொதுவான அறிகுறிகள்: காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் வீக்கம், உடல் சோர்வு ஏற்படுதல். சருமத்தில் சிறு கொப்பளங்கள் முகத்தில் தொடங்கி கை கால் உள்ளங்கை, உள்ளங்கால் வரை பரவக்கூடியது. தொண்டைப்புண், இருமல், தசை பிடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
பாதிப்புகள்: கண் வலி, பார்வை மங்குதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இந்நோய் மனிதர்களிடம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. WHOவின் கூற்றுப்படி கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள் போன்றவர்களுக்கு இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
* குடும்பத்தில் யாருக்கேனும் குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* நோய்வாய்ப்பட்டவர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
* அவர்கள் பயன்படுத்தும் படுக்கை உட்பட எந்தப் பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* தொற்று பாதிப்பு உள்ளவர்களைத் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி நன்கு கழுவவும்.
* இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
* இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
* அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க நோயாளிகள் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய முகக் கவசம் பயன்படுத்த வேண்டும்.
* உடல் ரீதியான நேரடித் தொடர்பு உடையவர்களிடமிருந்து இந்நோய் பரவும். எனவே, நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
* நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள் மூலமும் இந்நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.