ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்கு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்கு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், சங்கீதா போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்களைகள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினரும், விளையாட்டு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போதிலும் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று பாராளுமன்ற கட்டிடம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். தடுப்புகளை அகற்றி விட்டு வீரர், வீராங்கனைகள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வீராங்கனைகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்றவர்கள் ஆவார்கள். பஜ்ரங் புனியா 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார். மேலும் ஆசி விளையாட்டு, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்துள்ளார்.

30 வயதான சாக்ஷி மாலிக் 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றார். காமன் வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று இருந்தார். 28 வயதான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முத்திரை பதித்துள்ளார். சங்கீதா போகத் தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பிறகு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கி இருந்த கூடாரத்தை டெல்லி போலீசார் முற்றிலும் அகற்றினர். கட்டில், மெத்தை, மின் விசிறி, ஏர்கூலர், தார்பாய்களை ஆகியவற்றை அங்கிருந்து அகற்றினர். சில மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தருக்கு திரும்பினார்கள். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com