

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர் போலீசார்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு இன்று நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இனி யாரையும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் தினசரி காலை மற்றும் மாலை என 2 வேளையும் அடுத்த 2 வாரங்களுக்கு தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடக்கும் தினங்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஜூலை 18ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் ஜூலை 19ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜூலை 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவையும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியும் மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தம்மை சிறையில் அடைத்தது குறித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 28ஆம் தேதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதனிடையே, ஜாமீன் கோரிக்கையை மட்டும் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், அதை மட்டும் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றம் ஜாமீன் கோரிக்கையை தள்ளுபடி செய்த நிலையில், தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மார்க்கண்டேயன் புதிதாக வழக்கு தாக்கல் செய்தார்.
ஆனால், வழக்கை விசாரித்த தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம், மார்க்கண்டேயன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ஆஜரான திமுக வழக்கறிஞர் சரவணன், மார்க்கண்டேயன் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, மார்க்கண்டேயன் ஜாமீன் மனுவை திங்கட்கிழமை (ஆக.3) விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "ஆக.5 சட்டமன்றம் கூட உள்ளதால், இதுபோல எதிர்காலத்தில் பேசமாட்டேன் என உத்திரவாதம் அளித்தால் ஜாமீன் வழங்கலாம்” என காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் காசி ராஜன், ”இது அரசியல் நோக்கத்துடன் பேசப்பட்ட கருத்து, தனிப்பட்ட எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில், இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை பேசமாட்டேன் என உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். சட்டமன்றம் நடைபெறும் காலம் தவிர மற்ற நாட்களில் 2 வாரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.