திருமணத்திற்கு வரும் மொய் பணத்திற்கு வரி உண்டா? நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதென்ன..?

உறவினர்கள் கொடுக்கும் பணத்திற்கு வருமான வரி கிடையாது என்றாலும், சமீபத்தில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) வழங்கிய ஒரு தீர்ப்பு, நம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
marriage
marriage
Published on

இந்தியாவில் திருமணம், சடங்கு, பிறந்தநாள் போன்ற பல்வேறு விசேஷங்களுக்கு உறவினர்கள் மொய் அல்லது அன்பளிப்பாக ரொக்கமாக பணம் தருவது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.

அந்த வகையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கம் அல்லது வெள்ளி, கிஃப்ட் மற்றும் பணத்தை அன்பளிப்பாக வழங்குவது பொதுவாக நடைமுறையில் உள்ளது தான்.

அந்த வகையில் உறவினர்கள் கொடுக்கும் பணத்திற்கு வருமான வரி கிடையாது என்பது சட்டப்படி உண்மைதான் என்றாலும், சமீபத்தில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) வழங்கிய ஒரு தீர்ப்பு, நம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பு இனிவரும் காலங்களில் விசேஷங்களில் அன்பளிப்பாக பணம் பெறும் போது எந்த அளவிற்கு கவனமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உள்ளது.

ஏனெனில், அன்பளிப்பு கொடுத்தவர் வெறும் உறவினர் என்று சொன்னால் மட்டும் போதாது, உறவினர் என்பதை நிரூபிக்க தக்க ஆவணங்கள் இல்லையென்றால், நீங்கள் வாங்கிய அன்பளிப்பு மொத்தமும் கணக்கில் வராத வருமானமாக கருதப்பட்டு அந்த பணத்திற்கு வரி விதிக்கப்படும் என்பதை இந்த தீர்ப்பு நமக்கு உணர்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு தெரியுமா..? இந்த வகை வருமானங்களுக்கு நீங்கள் ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை..!
marriage

ஒரு நபர் தனது 10-வது திருமண நாளை வெகு விமர்சையாக விழாவாக கொண்டாடிய நிலையில் அவருக்கு உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தாராளமாக அதாவது தலா 2,100 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரை என மொய்(அன்பளிப்பு) வழங்கியதில் மொத்தமாக 10,43,998 ரூபாய் சேர்ந்தது.

இவ்வளவு பெரிய தொகை அன்பளிப்பாக வந்ததும் மிகவும் சந்தோஷமடைந்த அவர், உறவினர்கள் கொடுத்ததுதானே, இதற்கு வரி கட்டத் அவசியமில்லை என்று நினைத்து தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தார்.

திடீரென அவரது வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் ஆனவுடன் வருமான வரித்துறை அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது எனது திருமண நாளில் உறவினர்கள் அன்பளிப்பாக கொடுத்தது என்று அந்த நபர் பதிலளித்த போதும் வரித்துறை அதிகாரிகள் விடாமல், ஒவ்வொரு ரூபாய் கொடுத்தவரின் பெயரையும், அவர்களின் உறவுமுறைக்கான ஆதாரத்தையும் கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த நபரிடம் யாரிடம் எவ்வளவு பணம் அன்பளிப்பாக வாங்கினார் என்பதற்கோ, அன்பளிப்பு கொடுத்தவர் என்ன உறவுமுறை என்பதற்கான அடையாளச் சான்றுகள் (ID Proof) அல்லது ஆவணங்களோ அவரிடம் இல்லை.

அதாவது வருமான வரிச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட உறவினர்களிடமிருந்து (பெற்றோர், உடன்பிறப்புகள், மனைவி, பிள்ளைகள் போன்றோர்) பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி விலக்கு உண்டு என்றாலும், பணம் கொடுத்தவர் யார், அந்த உறவினர் சட்டப்படி உறவினர் பட்டியலில் இருப்பவர் என்றால் அதை நிரூபிப்பதற்கான தக்க ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.

அந்த பணத்திற்கு முறையான ஆதாரங்கள் இல்லாததால், அந்த நபரின் ரூ.10.43 லட்சத்தையும் விளக்கப்படாத வருமானம் (Unexplained Money) என்று வருமானவரித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதனை எதிர்த்து அந்த நபர் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (ITAT) முறையிட்ட போதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

‘அடிப்படை விவரங்கள் கூட இல்லாதபோது, அந்த பணத்தை அன்பளிப்பு’ என்று ஏற்க முடியாது என்று கூறி, அந்தத் தொகைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்தது.

இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம் வீட்டு விசேஷங்களுக்கு அன்பளிப்பாக வரும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் மட்டும் போதாது, அதைச் சட்டப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.

உங்கள் வீட்டு விசேஷத்திற்கு பெரிய அளவில் மொய் அல்லது அன்பளிப்பு வரும்போது, அதை யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை முறையாக எழுதி வைப்பதுடன், பெரிய தொகையாக இருந்தால், அவர்கள் வழங்கியதற்கான ஒரு கடிதம் (Gift Deed) அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாகப் பெறுவது மிகவும் பாதுகாப்பானதாகும்.

வருமான வரிச் சட்டத்தின்படி குறிப்பிட்ட உறவினர்களிடம் இருந்து வரும் பரிசுகளுக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு என்பதால் அந்த உறவுமுறைகள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி கொள்வது நல்லது.

விசேஷத்திற்கு வந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் போது, அது விசேஷத்தில் வந்த பணம் என்பதற்கான அழைப்பிதழ் மற்றும் புகைப்படங்களைச் சான்றாக வைத்திருப்பது மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
சொத்து வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்..! 6% வரி உயர்வு தற்காலிக நிறுத்தம்..!
marriage

சட்டம் உங்களுக்கு பலவகைகளில் சலுகை அளிக்கிறது என்றாலும் அந்தச் சலுகையைப் பெற "ஆதாரம்" எனும் திறவுகோல் மிக அவசியம் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் அன்பளிப்பாகப் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை வரி என்ற பெயரில் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டி கட்டாயம் ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com