

சொத்து வரி (Property Tax) என்பது உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சிகளால் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்கள், நிலங்கள் மீது விதிக்கப்படும் வருடாந்திர வரியாகும். இது சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற உள்ளூர் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய அடிப்படை வசதிகளையும், சுகாதார பணிகளையும் தடையின்றி செய்வதற்கு இதுதான் முதன்மையான நிதி ஆதாரம். அந்த வகையில் ஒரு நகரத்தின் உடைய வளர்ச்சியும், துய்மையும் நாம் செலுத்தும் வரியில் தான் இருக்கிறது.
ஆண்டுக்கு இருமுறை அதாவது அரை ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும் (ஏப்ரல்-செப்டம்பர், அக்டோபர்-மார்ச்). முறையாக வரி செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த சொத்து வரியை எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் உங்களுடைய சொத்தின் சதுர அடி எவ்வளவு, அந்த பகுதியில் அமைந்துள்ளது, அந்த சொத்தை நீங்கள் எதற்காக பயன்படுத்துகிறீர்கள் அதாவது கடை அல்லது சொந்த வீடாக அல்லது வாடகை விடுவதற்கு என்பதை பொறுத்து தான் வரியை முடிவு செய்வார்கள்.
உதாரணமாக ஒரு சாதாரண குடியிருப்பு வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட விகிதம் இருப்பது போல் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு விகிதத்தில் இருக்கும். இதையெல்லாம் விட முக்கியமானது அந்த சொத்து வரியை கட்டிய பிறகு உங்களுக்கு கிடைக்கும் சொத்து வரி கட்டிய ரசீது. ஒரு பேப்பர் மட்டும் கிடையாது. உங்களுடைய சொத்துக்கு நீங்கள் தான் சட்டப்பூர்வமான உரிமையாளர் என்பதற்கான மிக முக்கியமான ஆவணமாகும்.
நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லது புது மின்சார இணைப்பு அல்லது குடிநீர் இணைப்பு வேண்டும் என்றாலும் இந்த சொத்து வரி ரசீதை கண்டிப்பாக கேட்பார்கள். அதனால் சொத்து வரி கட்டிய பிறகு அந்த ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
முன்பெல்லாம் சொத்து வரியை கட்ட வேண்டும் என்றால் முனிசிபாலிட்டி அலுவலத்திற்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது சென்னை மாதிரியான பெரிய நகரங்களில் இருந்து கிராமபுற நகராட்சிகள் வரைக்கும் எல்லாமே ஆன்லைன் மூலம் பணம் கட்டும் வசதி வந்துவிட்டது. இதனால் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்கள் போனில் இருக்கக்கூடிய ஆப் மூலமாகவோ அல்லது மாநகராட்சியின் உடைய வெப்சைட்டின் மூலமாகவோ ஒரு சில நிமிடங்களில் வரியை கட்டிவிட்டு அந்த ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல் ஒவ்வொரு நிதியாண்டின் ஆரம்பத்திலும் ஏப்ரல் மாதத்திலும், வரியை கட்டும் நேர்மையான வரிதாரர்களுக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்ததொகை கொடுக்கிறார்கள். அதேசமயம் காலம் தாழ்த்தி வரியை கட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. உங்கள் வரியை முன்கூட்டியே கட்டுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் 5 சதவீத ஊக்கத்தொகையை ஏன் நீங்கள் இழக்க வேண்டும்.
இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம். யாருக்கெல்லாம் சொத்து வரியில் இருந்து 100 சதவீதம் முழுமையான விலக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு பெரிய சலுகையை வைத்திருக்கிறார்கள். போர் களத்தில் காயமடைந்த வீரர்கள், வீர தீர செயல்களுக்காக விருது வாங்கியவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய விதவை மனைவிகளுக்கு சொத்து வரியில் இருந்து முழு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் உள்ள நிபந்தனை என்னவென்றால் அவர்கள் சொந்தமாக குடியிருக்கும் வீட்டிற்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் இந்த சலுகையை பெற முடியாது. இந்த சலுகையை வாங்க வேண்டும் என்றால் உங்களுடைய அடையாள அட்டை, பணி சான்றிதழ், சொத்து விவரங்களை வைத்து உங்களுடைய உள்ளாட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் தேசத்திற்காக உழைத்தவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் கவுரவமாக இதை பார்க்கலாம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த வருடம் அமலுக்கு வரவேண்டிய 6 சதவீதம் சொத்து வரி உயர்வை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு என்பது தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உண்டாக்கி விடும் என்ற அரசியல் காரணத்தால் இந்த முடியை எடுத்துள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பால் இப்போதைக்கு சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை தந்துள்ளது. ஆனால் ஒன்றை நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், அது ஒரு தற்காலிகமாக சலுகை மட்டுமே, 2026 சட்டமற்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்த 6 சதவீத வரி உயர்வு மறுபடியும் அமலுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வரியின் சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்போதைக்கு வரியை பழைய விகிதத்திலேயே கட்டலாம் என்பது தான் தற்போது சொந்த வீடு வைத்துள்ள மக்களுக்கு கிடைத்துள்ள சந்தோஷமான செய்தியாகும்.
எனவே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அரசாங்கம் கொடுக்கும் இந்த தற்காலிக சலுகையை பயன்படுத்தி நிலுவையில் இருக்கும் வரிகளை இப்போதே கட்டி முடித்து விடுவது புத்திசாலித்தனம். ஏன்னா எப்போது வேண்டுமானாலும் வரி உயர்வு வரலாம். உங்களுடைய சொத்து வரியில் ஏதாவது பாக்கி இருந்தால் உடனே கட்டி முடித்து விடுங்கள்.