பென்ஷன் என்பது பிச்சை அல்ல - தற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Casual labourers in government entitled to pension
Casual labourers in government entitled to pensionAI Image
Updated on

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குபவை மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள். இந்தத் துறைகளின் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குப் பின்னால், பல தசாப்தங்களாகத் தங்கள் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைத்த லட்சக்கணக்கான 'தற்காலிக ஊழியர்களின்' (Casual Labourers) கண்ணீர்க் கதைகள் மறைந்து கிடக்கின்றன.

தபால் துறை, இரயில்வே, பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனத்துறை என அனைத்து இடங்களிலும் தினக்கூலிகளாகவும், தொகுப்பூதியத்திலும் சேர்ந்த மனிதர்கள், தங்களின் முப்பது, நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை அந்தத் துறைகளுக்காகவே அர்ப்பணித்துவிட்டு, இறுதியில் வெறும் கையோடு வீட்டிற்கு அனுப்பப்படும் அவலம் இந்தியாவில் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது.

"அவர்கள் முறைப்படி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை; தற்காலிக ஊழியர்களுக்குப் பென்ஷன் விதிமுறைகள் பொருந்தாது" என்கிற அதிகாரத்துவத்தின் ஒற்றை வாதம், அந்த விளிம்புநிலை மனிதர்களின் முதுமைக் காலத்தைப் பசி மற்றும் வறுமையின் பிடியில் தள்ளி வந்தது.

இந்த நீண்ட கால அநீதிக்கு, உச்ச நீதிமன்றம் தனது அண்மைய வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பின் மூலம் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.

மத்திய தபால் துறையில் தினக்கூலியாக சேர்ந்து, முப்பது ஆண்டுகளுக்கு மேல் உழைத்து மறைந்த ஒரு தற்காலிக ஊழியரின் விதவை மனைவிக்கு (பிகானி தேவி வழக்கு) பென்ஷன் மறுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்தியத் தொழிலாளர் சட்ட வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.

பீகாரைச் சேர்ந்த ஒரு விதவையின் கணவர், தபால் நிலையத்தில் முப்பது ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றிய நிலையில், ஓய்வூதியப் பலனை பெறுவதற்காக, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், பாட்னா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என மூன்று அடுக்கு வழக்குகளில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இதன் விளைவாக, உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து அவருக்குச் சாதகமாக உத்தரவிட்டது. இது நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற அரசின் கோரிக்கையை அது ஏற்க மறுத்தது. "ஓய்வூதியம் என்பது முதலாளியின் நிதி வசதியை சார்ந்திருக்கும் ஒரு கருணை விஷயம் அல்ல, மாறாக நீண்ட கால சேவையின் மூலம் சம்பாதித்த, ஒத்திவைக்கப்பட்ட ஊதியமாகும்.

ஜூன் 1 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று மாநில அஞ்சல் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுத்த 2019 ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களை, அஞ்சல் துறை முறையாகப் பணி நிரந்தரம் செய்யத் தவறியதால் அவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்க முடியாது என்று அந்த அமர்வு கூறியது.

சட்டப்பிரிவின் 14-வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மேற்கோள் காட்டி, வழக்கமான ஊழியர்களுக்கு இணையான கடமைகளையும் பொறுப்புகளையும் ஆற்றும் ஒரு குறிப்பிட்ட ஊழியர் பிரிவினருக்கு எந்தவொரு சலுகைகளையும் மறுக்கும் வகைப்பாடானது, "அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு முரணானதாக அமையும்" என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.

ஓய்வூதியம் (Pension) என்பது ஏதோ ஒரு முதலாளியோ அல்லது அரசாங்கமோ தன் ஊழியர்களுக்கு வழங்கும் 'அன்பளிப்போ' அல்லது 'பிச்சையோ'அல்ல. அது ஒரு தொழிலாளி தன் வாழ்நாளைக் கொடுத்து உழைத்ததற்காகப் பெறும் சட்டபூர்வமான உரிமை. அது ஒரு 'தள்ளிவைக்கப்பட்ட கூலி' (Deferred Wage).

பென்ஷன் என்பது இந்தத் தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார நலனின் மிக முக்கிய முகமாகும் (A Facet of Social Welfare)."

ஒரு தொழிலாளி, நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான அதே வேலைகளையும், அதே பொறுப்புகளையும் பல தசாப்தங்களாகச் செய்யும்போது, அவரை வெறும் 'தற்காலிக ஊழியர்' (Casual Labourer) என்று பெயர் காட்டி (Nomenclature), அவருக்குச் சேர வேண்டிய சமூகப் பாதுகாப்புப் பலன்களை மறுப்பது சட்டப்படி செல்லாது என்றும், அது அப்பட்டமான சுரண்டல் என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.

நிர்வாகத்தின் மெத்தனத்தால் அல்லது இலாகா விதிகளின் தாமதத்தால், ஒரு ஊழியரைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் தவறு; அதற்காக ஒரு ஏழைத் தொழிலாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளது

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் படியும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுத் தீர்ப்பின் படியும், அனைத்து அரசுத் தற்காலிக ஊழியர்களுக்கும் பென்ஷன் என்பது அவர்களின் உழைப்பிற்குரிய அடிப்படை உரிமையாகும்.

இந்தச் சட்ட விழிப்புணர்வு ஒவ்வொரு ஏழைத் தொழிலாளியின் இல்லத்தையும் சென்றடையும் போதுதான், இந்தத் தேசம் உண்மையான சமூகப் பொருளாதார நீதியை அடையும் என்பதில் ஐயமில்லை!

இதையும் படியுங்கள்:
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! இனி திருமணமான மகள்களுக்கும் 'கருணைப்பணி' வேலை..!
Casual labourers in government entitled to pension
logo
Kalki Online
kalkionline.com