

காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகள் இரண்டு மாநிலங்களுக்கு இடையே தீவிரம் அடைந்ததை தொடர்ந்து , நதிநீர் பங்கிட்டில் தமிழக மக்களுக்கு சாதகமாக காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிசீலனை ஒன்றை வழங்கி உள்ளது. இதன்படி கர்நாடகா அரசு,
தினமும் தமிழகத்திற்கு 15 டிஎம்சி தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 1 டிஎம்சி அளவிற்கு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கர்நாடக பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வழக்குகள் தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பை பெற்றுள்ளன. ஆயினும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருவது வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முந்தைய பரிந்துரைகளின் படி, 3500 கனஅடி நீர் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தண்ணீரை அந்தளவிற்கு திறந்து விடவில்லை. இந்நிலையில் இன்று மதியம் காவிரி ஒழுங்காற்று குழு , தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்.சி தண்ணீர் திறந்து விடுமாறு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கூடுகிறது. இதன் துணை அமைப்பாக காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு இருக்கிறது. இந்தக் குழுவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கூட வேண்டும், என்ற எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. அப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவாறு தேவைகளின் அடிப்படையில் இந்த குழு கூடுகிறது. இந்தக் குழு அவசரமாக எப்போது வேண்டுமானாலும் கூடலாம். இந்த குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உயர் அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துக் கொள்வார்கள்.
அந்த நடைமுறையில் , தற்போது இரு மாநிலங்களுக்குள் ஏற்படும் நதிநீர் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டம், இன்று புதுடெல்லியில் கூடி ஆலோசனை செய்து வந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய காவிரி நதி நீரின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி நதிநீர் ஒப்பந்தத்தின்படி கர்நாடகா அரசு 45.5 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை ஆகஸ்ட் மாதத்தில் திறந்து விட வேண்டும். முந்தைய மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரின் வரவு சேர்க்கப்பட்டு மொத்தமாக 88 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் , ஜூன், ஜூலை ,ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து இதுவரை 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த பணிகள் கடுமையான பாதித்துள்ளன.
இன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனை வெளிவந்துள்ளது. நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் , தமிழக அரசு சார்பாக காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.