

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி அடுத்த 15 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கர்நாடக அமைப்புகள், இன்று (ஆகஸ்ட் 13) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளன.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கும் பேருந்துகள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலே நிறுத்தப்பட உள்ளன.
தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழு அழைப்பு போராட்டம் காரணமாக அத்திப்பள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அத்திப்பள்ளி மற்றும் தமிழக எல்லையான ஜூஜூ வாடியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகதாது அணையை விரைந்து கட்டும் பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடக்கூடாது எனவும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் 14 தமிழக பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடாகா மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, கர்நாடகா அரசு அமல்படுத்துவது கிடையாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகா மறுக்கிறது” எனத் தெரிவித்தது.
நடப்பாண்டு மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை சாகுபடி எப்போதும் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இதன் காரணமாக குறுவை சாகுபடி பரப்பு 3.79 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பு 5.79 லட்சம் ஏக்கராக இருந்தது. இந்நிலையில் காவிரியிலும் தண்ணீர் திறந்து விடாத காரணத்தினால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னட அமைப்புகள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தில் பெரும்பாலான அமைப்புகள் பங்கேற்காத நிலையில், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் காவிரி நீர் திறக்க வேண்டிய சமயங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம் தான் என்றாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதற்கு தீர்வு காணவே முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்லவிருந்தார். ஆனால் அரசியல் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த சந்திப்பு நிகழாமல் போனது.
கர்நாடகாவில் போராட்டம் நடந்து வரும் சூழலில், தமிழக - கர்நாடக எல்லையில் செல்லும் தமிழக வாகனங்களை நிறுத்தி கன்னட அமைப்பினர் பூ கொடுத்து வருகின்றனர். போராட்டம் நடக்கும் சூழலில், கன்னட அமைப்பினரின் இந்த செயல் விசித்திரமாக இருக்கிறது.