

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகச் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவடைந்தது. இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய விசாரணை, மாலை 4:30 மணி வரை நீடித்தது. இதில் முக்கியமாக, அன்று நிகழ்ச்சிக்கு விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது குறித்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காகக் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி விஜய்க்குச் சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பொங்கல் பண்டிகை காரணமாக விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் பதிலளித்ததாகவும், சில கேள்விகளுக்குப் பதிலளிக்க அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ எழுப்பிய முக்கியக் கேள்விகள்:
அனுமதிக்கப்பட்டதை விடக் கூட்டம் அதிகமாக வந்தது எப்படி?
அளவுக்கு அதிகமான கூட்டத்தை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா?
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் பிரச்சாரத்தைத் தொடர்ந்தது ஏன்?
வாகனத்தில் நின்றபோது கீழே நடக்கும் நெரிசலைக் கவனிக்கவில்லையா?
அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், தான் தமிழகப் போலீஸாரை முழுமையாக நம்பியதாகவும், அவர்களின் வழிநடத்தலிலேயே செயல்பட்டதாகவும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. விசாரணை முடிந்ததும் சிபிஐ அலுவலகத்திலிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.