

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் கோவை, திருப்பூரில் ஜவுளித்தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அத்துடன் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, மோட்டார் பம்ப், வார்ப்படம் தொழில் நிறுவனங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளது.
இது குறித்து ஜவுளித்துறை துறையினர் கூறியது:
கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்ததால் ஒரு பில்லியன் டாலராக ஜவுளிகள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பூஜ்ஜியம் ஆகிவிடும். இந்த வரிக்கு கூடுதலாக, சாத்தியமான பிற நிலையான வரிகளும் உள்ளதால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதற்கிடையில் அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கப் போவதாக கூறுகிறார்கள். இதன் மூலம் ஜவுளி ஏற்றுமதி கடும் சரிவை சந்திக்கும். இதற்கு மாற்று வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.
ஆசிய சந்தைகள் சிறியவை. ஆப்பிரிக்க சந்தைகள் நம்பகத் தன்மையற்றதால் சவாலாக இருக்கும். அத்துடன் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைகளில் சில வரம்புகள் உள்ளன. எனவே அவற்றை மேம்படுத்தி அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளித்தொழில் துறையினர் கூறினர்.
வார்ப்படம் மற்றும் வால்வுகள் போன்ற பொருட்கள் உற்பத்தி மீதான தாக்கம் குறித்து தொழில்முனைவோர் கூறியது:
கோவையில் மோட்டார்கள், பம்புகள், ஆட்டோமொபைல், ஜவுளி எந்திரங்கள், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எந்திர கருவிகள், காற்றாலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.2 மெட்ரிக் டன் இரும்பு வார்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. கோவையிலிருந்து சராசரியாக 0.75 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வார்ப்புத்தொழில் துறை இதுவரை பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த சில மாதங்களில் 50,000 வேலை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பு இருக்கும். இத்தொழிலைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் முதலில் தேவையைப் புரிந்து கொண்டு உற்பத்திப் பிரிவை வடிவமைக்க வேண்டும். தொடர் ஆய்வுக்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வர 7 மாதங்களுக்கு மேலாகும் என்று கூறினர்.
வால்வு உற்பத்தித் துறையில் பெரிய வேலை இழப்பு ஏற்படாது. ஆனால் நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்ய முடிவதில்லை. எனவே ஐரோப்பா மற்றும் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்த வேண்டும் என்று வால்வு உற்பத்தியாளர்கள் கூறினர்.
அமெரிக்க வரிவிதிப்பு பம்ப் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இவை பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை சார்ந்துள்ளது. ஆனாலும் அமெரிக்க வர்த்தகத்தை நம்பியுள்ள கோவையை சேர்ந்த மிக சில பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று பம்ப் தொழில்முனைவோர் கூறினார்.
மூலப்பொருள் விலை உயர்வு, அமெரிக்க வரி உயர்வு தாக்கம் காரணமாக கோவையில் வேலை இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.