

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள், காவல் துறையினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை, டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் ஆட்சியர்,எஸ்பி ஆகியோருக்கு டெல்லி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி, மூன்று நாட்கள் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.