கரூர் வழக்கு விசாரணை: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகும் விஜய்..!!

CBI investigation to Vijay
TVK Vijay
Published on

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர்.

நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்கள், பொது மக்களிடம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையும் படியுங்கள்:
தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. சிபிஐ பிடியில் பிரசாரப் பேருந்து..!
CBI investigation to Vijay

இதைத்தொடர்ந்து, கடந்த 29-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த 3 நாள் விசாரணையிலும் அவர்கள் பங்கேற்று ஆதாரங்களை வழங்கினர்.

இந்த சூழ்நிலையில், 9-ம்தேதி விஜய் பிரசார பஸ் கரூர் விசாரணை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் பஸ் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு செய்து, அதனை புகைப்படமாக எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று (12-ந்தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

விஜய்க்கு ‘BNSS 179’ பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, அவர் குற்றம் செய்த நபர் இல்லை. குற்றம் நடந்த விதம், குற்றம் தொடர்பான விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் வருகைக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என தவெக சார்பில் டெல்லி காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, விஜய் சிபிஐ அலுவலகம் செல்லும் வழி, அவர் தங்கும் ஓட்டல், சிபிஐ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில், விஜய் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளதுடன் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

விஜய் நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது, வாகனத்தை பறிமுதல் செய்தது, ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாகாத நிலை என அடுத்தடுத்து விஜய்க்கு அடி மேல் அடியாக விழுந்து வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக தொண்டர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : கரூர் சம்பவம்: ஜன.12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்..!
CBI investigation to Vijay

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ குழு, கிடுக்கிபிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து 3 நாட்கள் வரை விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com