

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் பிரசார பேருந்தின் மீது த.வெ.க தலைவர் விஜய் நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை நாம் அறிவோம்.இந்த வேதனையான நிகழ்வு எப்படி நிகழ்ந்தது? என்பது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது.
விஜய் நாளை மறுநாள் (12 -01-2026) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் பேருந்தில் சோதனை நடத்தி, விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கரூர் தான்தோன்றிமலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய்யின் பிரசார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ துருவித் துருவி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், சென்னை பனையூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார பேருந்தை விசாரணைக்காகக் கரூருக்கு எடுத்துச் சென்றது சிபிஐ. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இனி விஜய் தனது பிரசார பேருந்தை நீதிமன்றம் மூலமாக மட்டுமே திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி போன்ற அரசு அதிகாரிகளிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி முதல் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் அடுத்த கட்டமாகவே த.வெ.க தலைவரான விஜய்க்கு வரும் ஜனவரி 12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்தச் சூழலில், கரூரில் விபத்து நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திய வாகனம் மற்றும் அது நின்ற இடம், கூட்டம் கூடிய சாலையின் அகலம் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களை அதிகாரிகள் துல்லியமாக அளவீடு செய்தனர். இவை அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்து விரிவான விசாரணை நடத்தினர்.
ஒருபுறம் பொங்கல் ரிலீஸாகக் கோடிக்கணக்கில் முதலீடு செய்த 'ஜனநாயகன்' படத்தின் சென்சார் சிக்கல், இன்னொருபுறம் சிபிஐ நடவடிக்கைகள் என நடிகர், தலைவர் என்ற இரண்டு பொறுப்புகளிலும் விஜய்க்குப் பெரும் சோதனைகள் ஏற்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் சமாளித்து விஜய் மீள்வாரா? என அரசியல் வட்டாரத்தில் பலவிதமான கருத்துகள் உலா வருகிறது.