
தற்போதை பரபரப்பான வாழ்க்கை முறையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்.) 2019-21-ன் படி 5 பெரியவர்களில் ஒருவர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவராக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும் லேன்செட் உலகளாவிய நோய்ச் சுமை-2021 குறித்த அறிவிப்பில், இந்தியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021-ல் 18 கோடியில் இருந்து, 2050-ல் 44.9 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதற்கு அவர்களின் மோசமான உணவுப் பழக்கங்கள், குறைந்த அளவிலான உடல் செயல்பாடுகள்தான் காரணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தீங்கு விளைவிக்கும் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் கூட்ட அரங்கு, சிற்றுண்டிச் சாலைகள், ஹால் மற்றும் பிற பொது இடங்களில் அது குறித்த காட்சிப் படங்களை வைக்க வேண்டும்.
* உடல் பருமனை குறைக்கவும், அதனை எதிர்த்து போராடவும் அதுகுறித்த தகவல்கள், நினைவூட்டல்கள், சுகாதாரச் செய்திகளை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்.
* அதிக பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுதல், படிக்கட்டுகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், குறுகிய உடற்பயிற்சி இடைவேளைகளை உருவாக்குதல் என பள்ளிகளில் ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஆரோக்கிய உணவுமுறையை ஊக்குவிக்க பள்ளி மாணவ-மாணவிகளையே உடல் பருமன் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை தயாரித்து கொண்டு வரச்சொல்லலாம். சுவரொட்டிகள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் iec@fssai.gov.in என்ற உணவு பாதுகாப்பு தரநிர்ணய ஆணையத்தின் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இதனை மனதில் வைத்து, அனைத்து பள்ளிகளும் ஆரோக்கியமான பள்ளிச்சூழலை மேம்படுத்துவதற்கும், குழந்தைகளின் நல்வாழ்வை பாதுகாப்பதற்கும் இந்த விஷயத்தில் தேவையானதை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான பள்ளி சூழலை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு மாநில முதல்வர்களை வலியுறுத்தி CBSE சுற்றறிக்கையை முடித்துள்ளது.